போலீஸ் பணிக்கான 2-ம் கட்ட உடல் தகுதி தேர்வில் 487 பேர் தேர்ச்சி
திண்டுக்கல்லில் நடந்த போலீஸ் பணிக்கான 2-ம் கட்ட உடல் தகுதி தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 487 பேர் தேர்ச்சி பெற்றனர்.
திண்டுக்கல்:
போலீஸ் பணி
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2-ம் நிலை போலீஸ்காரர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர் ஆகிய காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாநிலம் முழுவதும் உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.
அதன்படி திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 692 பேருக்கு திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.
இதில் இரு மாவட்டங்களை சேர்ந்த ஆண்களுக்கான முதல் கட்ட உடல் தகுதி தேர்வு கடந்த 2-ந்தேதி நடந்தது. அப்போது சான்றிதழ் சரிபார்ப்பு, ஓட்டப்பந்தயம், மார்பளவு எடுத்தல் உள்ளிட்ட தேர்வுகள் நடந்தது.
அதேபோல் பெண்களுக்கான முதல் கட்ட உடல் தகுதி தேர்வு கடந்த 3-ந்தேதி நடந்தது.
487 பேர் தேர்ச்சி
இந்த நிலையில் முதல் கட்ட உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2-ம் கட்ட தேர்வு நேற்று நடந்தது. இதற்காக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 600 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் 595 பேர் பங்கேற்றனர்.
மேலும் தேர்வில் பங்கேற்க கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து 2-ம் கட்ட உடல் தகுதி தேர்வில் கலந்துகொண்ட ஆண்களுக்கு நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகியவை நடத்தப்பட்டன. இதில் 487 பேர் தேர்ச்சி பெற்றனர். மீதமுள்ள 108 பேர் உடல்தகுதி தேர்வில் தோல்வி அடைந்தனர்.
2-ம் கட்ட உடல் தகுதி தேர்வு நடைமுறைகள் அனைத்தும் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டது. இந்த உடல் தகுதி தேர்வை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி, சேலம் மதுவிலக்கு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
------
----