வீட்டின் குளியல் அறையில் 10 வயது சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை
வீட்டின் குளியல் அறையில் 10 வயது சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
திரு.வி.க.நகர்,
சென்னை ஐ.சி.எப். அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி ஜீவா. இவர்களுக்கு 7-ம் வகுப்பு படிக்கும் கிருபா (13) என்ற மகள் உள்ளார். ரித்தீஷ் (10) என்ற மகனும் இருந்தான். அவன், 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
ஜீவா, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து தனியாக சென்று விட்டார். இதனால் சதீஷ் தனது தந்தை மற்றும் 2 பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.
நேற்று காலை வழக்கம்போல் சதீஷ் ஆட்டோ ஓட்ட சென்று விட்டார். மதியம் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்த ரித்திஷ், குளியல் அறைக்கு சென்று வருவதாக தனது அக்காளிடம் கூறிவிட்டு சென்றான்.
ஆனால் நீண்ட நேரமாகியும் ரித்திஷ் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த கிருபா, குளியல் அறை கதவை தட்டினார். ஆனால் ரித்திஷ் கதவை திறக்கவில்லை. எந்த சத்தமும் அவரிடம் இருந்து வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிருபா, தனது வீட்டின் அருகில் வசிக்கும் தமிழரசு என்பவரை அழைத்து வந்து குளியல் அறை கதவை உடைத்து பார்த்தபோது, ரித்தீஷ் குளியல் அறை ஜன்னலில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஐ.சி.எப். போலீசார் ரித்திஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் ரித்தீசின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.