சேலம் இலை வியாபாரி கொலை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றது எப்படி?- கைதான இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம்
சேலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து இலை வியாபாரியான கணவரை கொன்றது எப்படி? என்பது குறித்து கைதான இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம்:
சேலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து இலை வியாபாரியான கணவரை கொன்றது எப்படி? என்பது குறித்து கைதான இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இலை வியாபாரி
சேலம் அம்மாபேட்டை மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 39). இவர் அம்மாபேட்டை போலீஸ் நிலையம் அருகில் வாழை இலை வியாபாரம் செய்து வந்தார். இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய அக்காள் மகள் ஷாலினியை (22) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1½ வயதில் நிரஞ்சனா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், கடந்த 2-ந் தேதி இரவு வீட்டில் பிரபு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பிரபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை
தொடர்ந்து பிரபு சாவு குறித்து வீட்டில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது அவருடைய மனைவி ஷாலினியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவருடைய பதில் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
உடனே ஷாலினியை போலீசார் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஷாலினி, தன்னுடைய கணவர் கொலை செய்யப்பட்டதாகவும், தானும், கள்ளக்காதலனும் சேர்ந்து இந்த கொலையை செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டார்.
பரபரப்பு வாக்குமூலம்
இதைத்தொடர்ந்து தன்னுடைய கணவர் கொலை செய்யப்பட்டது குறித்து ஷாலினி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
நான், பி.பி.ஏ. பட்டதாரி, கல்லூரியில் படிக்கும் போது சக மாணவர் ஒருவரை காதலித்தேன். எங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு வேறு ஒரு நபரை காதலித்தேன். அதற்கும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆண் நண்பர்கள் எனக்கு உண்டு. என்னுடைய நடவடிக்கைகள் எனது பெற்றோருக்கு பிடிக்கவில்லை. எனவே என்னை, தாய்மாமன் பிரபுவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
என்னை விட அவருக்கு வயது அதிகம் என்பதால் திருமணத்துக்கு நான் மறுப்பு தெரிவித்தேன். அப்படி இருந்தும் வலுக்கட்டாயமாக எனக்கு பிரபுவுடன் திருமணம் செய்து வைத்தனர். அதன் பிறகு எனக்கும், என்னுடைய கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
முகநூல் நண்பர்கள்
இதற்கிடையே முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதில் அதிக ஆர்வம் எனக்கு உண்டு. இதன்மூலம் ஏராளமான ஆண் நண்பர்கள் எனக்கு உள்ளனர். நான் எப்போதும் செல்போனில் இருப்பதை என்னுடைய கணவர் கண்டித்து வந்தார். அதனை நான் கண்டுகொள்வது கிடையாது. இதனால் என்னிடம் இருந்த செல்போனை அவர் பறித்துக் கொண்டார்.
செல்போன் இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. கணவருக்கு தெரியாமல் நான் ஒரு செல்போன் வாங்கி, அதன்மூலம் என்னுடைய சமூக வலைத்தள ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருந்தேன். அப்போதுதான் திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த அப்பு (21) எனக்கு அறிமுகம் ஆனார். ஓட்டல் தொழிலாளியான அப்புவும், நானும் முதலில் நண்பர்களாகத்தான் பழகினோம்.
தனிமையில் சந்திப்பு
சாதாரண நண்பர்களாக இருந்த எங்களது உறவு நாளடைவில் கள்ள உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டோம். என்னுடைய பெற்றோர் வீடு நாமக்கல்லில் இருப்பதால், நான் அங்கு செல்வதாக கூறி விட்டு அப்புவுடன் சென்று விடுவேன். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளோம்.
இதற்கிடையே ஒருவர் இல்லாமல் இன்னொருவர் வாழ முடியாது என்ற நிலைக்கு இருவரும் வந்தோம். அப்போது வீட்டை விட்டு வந்து விடு, எங்காவது சென்று சந்தோஷமாக வாழ்வோம் என்று அப்பு கூறினார். அதற்கு நான், எங்கு சென்றாலும் நம்மை கண்டுபிடித்து விடுவார்கள். ஒன்றாக வாழ விட மாட்டார்கள் என்று கூறினேன்.
கொலை செய்ய திட்டம்
நாம் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் என்னுடைய கணவரை தீர்த்துக் கட்ட வேண்டும் என்றேன். அதற்கு அப்புவும் சம்மதம் தெரிவித்தார். எங்களது திட்டத்தின்படி கடந்த 2-ந் தேதி இரவு அப்பு எனது வீட்டுக்கு வந்தார். அவரை நான் வீட்டு மாடியில் பதுங்கி இருக்க இடம் ஏற்பாடு செய்து கொடுத்தேன். இலை வியாபாரத்தை முடித்து விட்டு இரவு 10.30 மணி அளவில் என்னுடைய கணவர் பிரபு வீட்டுக்கு வந்தார். அவர் சாப்பிட்டு விட்டு தூங்கினார்.
நள்ளிரவு 1.30 மணி அளவில் நான், அப்புவை வரவழைத்து எங்களது திட்டத்தை அரங்கேற்ற முடிவு செய்தோம். அதன்படி முதலில் பிரபுவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினோம். பின்னர் ஒரு துணியை எடுத்து அவரது மூக்கையும், வாயையும் அமுக்கினோம். சிறிது நேரத்தில் பிரபு மூச்சுத்திணறி இறந்தார். நான் உடனே அப்புவை அங்கிருந்து தப்பி செல்லும்படி கூறினேன்.
கொள்ளை நாடகம்
சிறிது நேரம் கழித்து நான் என்னுடைய மாமியாரை அழைத்து பிரபு மூச்சு பேச்சு இல்லாமல் கிடக்கிறார் என்று கூறினேன். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்சு வரவழைத்தோம். தகவல் அறிந்து போலீசாரும் வந்தனர். அவர்களிடம் மர்மநபர்கள் வந்து என்னுடைய கணவரை தாக்கி விட்டு நகைகளை கொள்ளையடித்ததாக நாடகம் ஆடினேன்.
ஆனால் போலீசாரின் விசாரணையில் என்னால் தப்பிக்க முடியவில்லை. உண்மையை ஒத்துக்கொண்டேன். அதன்பேரில் என்னை போலீசார் கைது செய்து விட்டனர்.
இவ்வாறு வாக்குமூலத்தில் ஷாலினி கூறியுள்ளார்.
கள்ளக்காதலன் கைது
பின்னர் ஷாலினி கொடுத்த தகவலின்பேரில் சேலத்தில் பதுங்கி இருந்த அவருடைய கள்ளக்காதலன் அப்புவை போலீசார் கைது செய்தனர். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஷாலினி, அப்பு இருவரும் பிரபுவை கொலை செய்தது எப்படி? என்பதை நடித்துக் காட்டினர்.
1½ வயதில் பெண் குழந்தை இருப்பதை மறந்து கள்ளக்காதலில் திளைத்த ஷாலினியால் அந்த குடும்பமே சீரழிந்து விட்டது என்று அக்கம் பக்கத்தினர் வேதனை தெரிவித்தனர்.