துணிக்கடைகளை திறக்க அனுமதிக்க கோரி வியாபாரிகள் சாலை மறியல்

வண்ணாரப்பேட்டையில் துணிக்கடை வியாபாரிகள், தங்கள் கடைகளை திறக்க அனுமதிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-04 22:38 GMT
திருவொற்றியூர், 

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான தியாகராய நகர் ரங்கநாதன் தெரு, வடக்கு உஸ்மான் சாலை, புரசைவாக்கம், என்.எஸ்.சி. போஸ் சாலை, அமைந்தகரை, ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, எம்.சி. ரோடு, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரையிலான கடைகள், மார்க்கெட் உள்பட 9 இடங்களில் உள்ள வணிக வளாகங்கள், கடைகளை வருகிற 9-ந் தேதி வரை திறக்க மாநகராட்சி தடை விதித்து உள்ளது.

இதனால் வண்ணாரப்பேட்டை பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி, ரெடிமேட் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிங்காரதோட்டம், என்.என்.கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறிய அளவிலான ரெடிமேட் கடைகளை மட்டும் திறக்க அதிகாரிகள் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் எம்.சி.சாலையில் உள்ள மற்ற துணிக்கடை வியாபாரிகள், தங்களது கடைகளையும் திறக்க அனுமதிக்ககோரி வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையில் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ராயபுரம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்