தலித் என்பதால் வீட்டுக்கு செல்லும் பாதையை அடைத்த கொடுமை

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தலித் என்பதால் தனது வீட்டுக்கு செல்லும் பாதையை பக்கத்து வீட்டுக்காரர்கள் முள்வேலி அமைத்து அடைத்து விட்டதாக கலெக்டரிடம் விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார்.

Update: 2021-08-04 21:42 GMT
கொள்ளேகால்: சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தலித் என்பதால் தனது வீட்டுக்கு செல்லும் பாதையை பக்கத்து வீட்டுக்காரர்கள் முள்வேலி அமைத்து அடைத்து விட்டதாக கலெக்டரிடம் விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார். 

விவசாயி

சாம்ராஜ்நகர் மாவட்டம் மாதேஸ்வரன் மலை பகுதியில் வசித்து வருபவர் பசம்மகோம் கிருஷ்ணா. விவசாயியான இவர் கடந்த 2012-ம் ஆண்டு அப்பகுதியில் நிலம் வாங்கினார். 2017-ம் ஆண்டு வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீடு பண்ணை தோட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையில் இவரது பக்கத்து தோட்டத்துக்காரர்கள், இவருக்கு பாதை வழங்காமல் வழியை முள்வேலி அமைத்து அடைத்துள்ளனர். 

மேலும் அவர்கள், கிருஷ்ணவுக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர வனத்துறையினரிடம் கிருஷ்ணா வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து விட்டதாக புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு கிருஷ்ணாவின் இடத்தில் இருந்து 100 அடி இடத்தை கையகப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. 

கலெக்டரிடம் புகார்

இதுபற்றி கிருஷ்ணா தலித் அமைப்பினர் மூலம் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார். அதில், ‘‘நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் எனக்கு எனது வீட்டின் அருகே உள்ளவர்கள் பல வழிகளில் தொல்லை கொடுத்து வருகிறார்கள். எனது வீட்டுக்கு செல்லும் பாதையை முள்வேலி அமைத்து அடைத்துள்ளனர். மேலும் வனத்துறையினரிடம் பொய் புகார் அளித்து எனது நிலத்தை அபகரித்துக் கொண்டனர். இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார். புகாரின்பேரில் இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்