சிவமொக்கா அருகே பட்டப்பகலில் விவசாயி- குடும்பத்தினரை தாக்கி நகை-பணம் கொள்ளை

சிவமொக்கா அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து விவசாயி- குடும்பத்தினரை தாக்கி நகை-பணத்தை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.;

Update:2021-08-05 03:11 IST
சிவமொக்கா: சிவமொக்கா அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து விவசாயி- குடும்பத்தினரை தாக்கி நகை-பணத்தை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் 

சிவமொக்கா தாலுகா சிக்கமரடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயண்ண கவுடா. விவசாயி. இவர் தனது குடும்பத்தினருடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஜெயண்ண கவுடா, அவரது மகன் கிரீஷ் வெளியே சென்று இருந்தனர்.

இதனால் வீட்டில் ஜெயண்ண கவுடாவின் மனைவி, கிரீசின் மனைவி சைத்ரா, மகள் ஆகியோர் இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் ஜெயண்ண கவுடாவின் வீ்ட்டிற்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர், வீட்டிற்குள் அதிரடியாக புகுந்தனர். பின்னர் கிரீசின் மகளின் கழுத்தில் கத்தி வைத்த மர்மநபர்கள் நகை, பணத்தை தரும்படியும், இல்லாவிட்டால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்தனர்.

4 பேருக்கு வலைவீச்சு 

 இந்த சந்தர்ப்பத்தில் ஜெயண்ண கவுடாவும், கிரீசும் வீட்டிற்கு வந்தனர். ஆனால் அவர்களையும் தாக்கிய மர்மநபர்கள் பீரோவில் இருந்த தங்கநகைகள்-பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றனர். 
மர்மநபர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஜெயண்ண கவுடா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவமொக்கா புறநகர் போலீசார் ஜெயண்ண கவுடாவின் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவங்கள் குறித்து விசாரித்தனர். பின்னர் அங்கு வந்த மோப்ப நாய் சம்பவம் நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. 

ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற தங்கநகைகள், பணத்தின் மதிப்பு உடனடியாக தெரியவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து கிரீஷ் அளித்த புகாரின்பேரில் சிவமொக்கா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்