இயற்கை உணவுகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்
இயற்கை உணவுகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகா்கோவில்:
இயற்கை உணவுகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
குமரி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலையை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகள் தினமும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 4-வது நாளில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் "நம் உணவே மருந்தாகட்டும், நம் சமையலறையே மருந்தகம் ஆகட்டும்" என்ற நோக்கத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இயற்கை மூலிகைகள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் இயற்கை மூலிகைகள் மற்றும் மருந்துகளான மஞ்சள், கற்றாழை கலந்த நீர் அல்லது படிகாரம் (சீனிகாரம்) கலந்த நீரை பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் புதினா, ஓமம், நொச்சி இலை, கற்பூரவல்லி இலை, வேப்பிலை, மஞ்சள் மற்றும் நீலகிரி தைலம் கலந்து தினமும் ஒரு வேளை நீராவி பிடிக்க வேண்டும். தினமும் இருவேளை மஞ்சள், கல் உப்பை வெந்நீரில் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். ஓமம், கருஞ்சீரகம், பச்சை கற்பூரம் ஆகியவற்றை வறுத்து ஒன்று சேர்த்து பொட்டலமாக செய்து முகர்தல் வேண்டும். மஞ்சள், மிளகு, தனியா, அன்னாசிப்பூ, கிராம்பு, சீரகம், பெருங்காயம் போன்ற நறுமணப் பொருட்களை அதிக அளவில் உணவில் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தினை ஏற்படுத்த வேண்டும்.
கொத்தமல்லி, புதினா, தூதுவளை, நெல்லிக்காய், பிரண்டை இவற்றை துவையலாகவும், முசுமுசுக்கை, முள்முருங்கை இலை, முருங்கைக் கீரை இவற்றை அடையாகவும், கசப்பு சுவையுடைய சுண்டை, பாகற்காய் ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்த்தும், சிட்ரிக் அமிலத்தன்மை அதிகம் உள்ள ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் மாதுளை, அன்னாசி பழச்சாறு மற்றும் இளநீர் அருந்துதல் உடல்நலத்திற்கு நல்லது. மேலும் துளசி, இலவங்கப்பட்டை, சுக்கு, மிளகு, தண்ணீர், நாட்டு சர்க்கரை, எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க வைத்த மூலிகை தேநீரினையும் குடிக்கலாம்.
முக கவசம் கட்டாயம்
மேலும் நீரிழிவு நோயாளிகள் ஆவாரம்பூ கலந்த தேநீர் அருந்தலாம். கடுக்காய்த்தோல், நெல்லி வற்றல், தான்றிக்காய் தோல் (திரிபலா பொடி) சமஅளவு கலந்து அரை தேக்கரண்டி வெந்நீரில் காலை மற்றும் மாலை நேரங்களில் உண்ணலாம். உயர் ரத்த அழுத்தமுள்ளவர்கள் சீரகம் கலந்த நீர் பருகலாம். வெண்தாமரை இதழ் (5), ஏலம், சிறிதளவு இஞ்சி துண்டு, எலுமிச்சை தோல் கலந்த தேநீர் பருகலாம். ஆஸ்துமா நோயாளிகள் திப்பிலி, மிளகு, கற்பூரவல்லி கலந்த தேநீர் அருந்தலாம்.
எனவே கொரோனா தடுப்பூசி போட்டாலும், போடாமல் இருந்தாலும் பொதுமக்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்து, கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் கைகழுவும் திரவத்தினை பயன்படுத்தி சுத்தமாக வைத்துக் கொள்வதோடு தன் சுகாதாரம் பேணுதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கேரள எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டு குமரி மாவட்டத்திற்கு பொதுமக்கள் வந்தாலும், வெளியே சென்றாலும் காய்ச்சல் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். 3-வது அலை வந்தால், அவற்றை தடுக்க முன்னேற்பாடு நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கிளாரன்ஸ் டேவி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மேபல் அருள்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.