மல்லிகை விளைச்சல் அமோகம்; விலை வீழ்ச்சி
மல்லிகை விளைச்சல் அதிகம் இருந்தும் விலை வீழ்ச்சி அடைந்திருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
காரியாபட்டி,
மல்லிகை விளைச்சல் அதிகம் இருந்தும் விலை வீழ்ச்சி அடைந்திருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மல்லிகை சாகுபடி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா காரியாபட்டி, கே.செவல்பட்டி, எஸ்.தோப்பூர், கழுவனச்சேரி, அல்லிக்குளம், ஆவியூர், குரண்டி சீகனேந்தல், அரசகுளம் பகுதிகளில் விவசாயிகள் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் மல்லிகை பூ சாகுபடி செய்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
காரியாபட்டி பகுதியில் உள்ள விவசாயிகள் மல்லிகைப்பூவை விரும்பி சாகுபடி செய்துள்ளோம்.
வெளி மாவட்டங்களில் இருந்து கன்றுகளை வாங்கி கொண்டு அதற்கு ஏற்றாற்போல் பாத்தி மற்றும் வரப்பு ஏற்படுத்தி சாகுபடி செய்து வருகிறோம். ஒரு ஏக்கர் மல்லிகை பூ விவசாயம் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது ரூ.1 லட்சத்திற்கும் மேல் செலவு ஏற்படுகிறது.
விலை வீழ்ச்சி
தற்போது பூ விளைச்சல் நன்றாக உள்ளது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. தற்போது ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.150 முதல் ரூ.200 வரை விலை போகிறது.
விளைச்சல் நன்றாக இருந்தும், விலை இல்லாததால் நாங்கள் மனவேதனையில் இருக்கிறோம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக மல்லிகைப்பூவிற்கு உரிய விலை கிைடக்கவில்ைல. ஆதலால் நாங்கள் பூக்களை தெரு, தெருவாக கொண்டு போய் விற்று வந்தோம். அதுவும் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
வெளிநாடு
திருவிழா மற்றும் முகூர்த்த தின நேரங்களிலும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களிலும் மல்லிகை பூ விளைச்சல் குறைவாக இருந்தாலும் ஒரு கிலோ ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை ஆனது. ஆனால் அந்த காலத்தில் மல்லிகை பூ அதிகமாக பூப்பதில்லை. காரியாபட்டி பகுதியில் விளையும் மல்லிகைப்பூக்கள் தினமும் விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. விளைச்சல் இருந்தும் மல்லிகைப்பூவிற்கு உரிய விலை இல்லாததால் விவசாயிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
எனவே மல்லிகை பூக்களை விவசாயிகளிடம் அரசு கொள்முதல் செய்து உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.