போலீஸ் வேலைக்கு ஆண்களுக்கான 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வு

பாளையங்கோட்டையில் போலீஸ் வேலைக்கு ஆண்களுக்கான 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது.

Update: 2021-08-04 19:56 GMT
நெல்லை:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆண்களுக்கு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திலும், பெண்களுக்கு பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மைதானத்திலும் முதற்கட்ட உடற்தகுதி தேர்வு கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி கடந்த 2-ந்தேதி வரை நடந்தது.

முதற்கட்ட தேர்வில் 2,298 ஆண்களும், 1,320 பெண்களும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சியடைந்த பெண்களில் தினமும் 500 பேருக்கு பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மைதானத்தில் 2-ம் கட்ட தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

இதேபோன்று முதற்கடட தேர்வில் தேர்வான ஆண்கள் 2,298 பேரில் தினமும் 500 பேர் வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று அழைக்கப்பட்ட ஆண்கள் 500 பேரில் 499 பேர் ஆஜரானார்கள். அவர்களுக்கு 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

கயிறு ஏறுதலில் 5 மீட்டர் உயரம் ஏறினால் ஒரு நட்சத்திரமும் (2 மதிப்பெண்கள்), 6 மீட்டர் ஏறினால் 2 நட்சத்திரங்களும் (5 மதிப்பெண்கள்) வழங்கப்பட்டன. இதேபோன்று நீளம் தாண்டுதலில் 3.80 மீட்டர் தூரம் தாண்டினால் ஒரு நட்சத்திரமும், 4.50 மீட்டர் தூரம் தாண்டினால் 2 நட்சத்திரங்களும் வழங்கப்பட்டன. உயரம் தாண்டுதலில் 1.20 மீட்டருக்கு ஒரு நட்சத்திரமும், 1.40 மீட்டருக்கு 2 நட்சத்திரங்களும் வழங்கப்பட்டன.

100 மீட்டர் ஓட்டப்பந்தய தூரத்தை 15 வினாடிகளில் கடந்தால் ஒரு நட்சத்திரமும், 13.50 வினாடிகளில் கடந்தால் 2 நட்சத்திரங்களும் வழங்கப்பட்டன. 400 மீட்டர் ஓட்டப்பந்தய தூரத்தை 80 வினாடிகளில் கடந்தால் ஒரு நட்சத்திரமும், 70 வினாடிகளில் கடந்தால் 2 நட்சத்திரங்களும் வழங்கப்பட்டன.

கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு தலா 3 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆண்களுக்கான 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வு வருகிற 16-ந்தேதி வரையிலும், பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு வருகிற 12-ந்தேதி வரையிலும் நடைபெறுகிறது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெறுகிறவர்களுக்கு இறுதியாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்