சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி,
புதுவை மாநில அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய கூட்டமைப்பு தலைவர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் லட்சுமணசாமி, பொருளாளர் சீனி வாசன், செயலாளர் விஜயகுமார் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தேசிய சுகாதார இயக்கத்தில் மருந்துகளை வாங்கியதில் ஊழல் நடைபெற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த புதுவை அரசு பரிந்துரைக்க வேண்டும். பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். பதவி உயர்வு மற்றும் காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.