வாணியம்பாடியில் நகை, அடகு கடைகளில் அதிகாரி திடீர் ஆய்வு
வாணியம்பாடியில் நகை மற்றும் அடகுக்கடையில் வருவாய் கோட்டாட்சியர் அதிகாரிகளுடன் சென்று திடீர் ஆய்வு செய்தார்.
வாணியம்பாடி
வருவாய்த்துறையினர் ஆய்வு
வாணியம்பாடியில் 300-க்கும் மேற்பட்ட நகை மற்றும் அடகுக்கடைகள் உள்ளன. உரிய உரிமம் மற்றும் ஆவணங்களுடன் கடைகள் செயல்பட்டு வருகிறதா? என வருவாய்த்துறையினர் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது.
கொரோனா ஊரடங்கால் கடந்த ஒரு வருடமாக ஆய்வு மேற்கொள்ளப்படாத நிலையில் திடீரென நேற்று வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி தலைமையிலான வருவாய்த்துறையினர் வாணியம்பாடி மண்டி வீதி, நகைக்கடை பஜார் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட நகை மற்றும் அடகுக்கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.
2 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
மண்டி வீதியில் உள்ள பாபு என்பவரின் கடையில் குழந்தை தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குவதாக கிடைத்த புகாரின் பேரில், அந்தக் கடையில் மாலை 5 மணியளவில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் 14 வயது மற்றும் 17 வயது மதிக்கத்தக்க 2 சிறுவர்கள் வேலை பார்த்ததும், கடையின் பயன்பாட்டுக்கு லேப்டாப்கள், செல்போன்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம், சமூக நலத்துறை அலுவலர் வைஜயந்தி, தொழிலாளர் நலத்துறை அலுவலர் மனோகரன், குழந்தை தொழிலாளர் நல அலுவலர் மலர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து இரவு 9 மணி வரை கடையில் சோதனைச் செய்தனர். கடையில் வேலை செய்து வந்த மேற்கண்ட 2 சிறுவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு மருத்துவச் சான்றுக்காக அழைத்துச் சென்றனர். இதனால் வாணியம்பாடி பஜார் வீதியில் பரபரப்பு ஏற்பட்டது.