கோவையில் போலீஸ் பணிக்காக 556 பேருக்கு உடற்தகுதி தேர்வு
கோவையில் போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் நேற்று 556 பேருக்கு கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் நடைபெற்றது.
கோவை,
தமிழ்நாடு சீருடை தேர்வு வாரியம் சார்பில் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பு படை வீரர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் தேர்வு பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 26-ந் தேதி தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன்படி கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வு கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த உடற்தகுதி தேர்வு கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மேற்பார்வையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள ஒரு திருநங்கை உள்பட 3,263 பேர் தகுதி பெற்றிருந்தனர்.
இதில் ஆண்களுக்கு முதற்கட்டமாக உயரம், மார்பளவு சரிபார்த்தல் உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 2-ந் தேதி தொடங்கியது.
இந்த நிலையில் நேற்று முதல் இதில் பங்கேற்றுள்ள ஆண்களுக்கு கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற்றன. இதில் கலந்து கொள்ள 556 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இவர்கள் அனைவரும் பி.ஆர்.எஸ். மைதானத்தில் சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர். அதன் பின்னர் ஒவ்வொருக்காக உடற்தகுதி தேர்வு நடந்தது.இதுகுறித்து போலீஸ் உயர்அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஆண்களுக்கான உடற்தகுதி தேர்வில் மார்பளவு, உயரம் உள்ளிட்டவற்றில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அடுத்த கட்டமாக கயிறு ஏறுதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் ஆகிய தேர்வு நடத்தப்படுகிறது. இதில் கயிறு ஏறுதலில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல் இவற்றில் ஏதாவது ஒன்றை விண்ணப்பதாரர் தேர்வு செய்து கொள்ளலாம். கயிறு ஏறுதலில் 5 மீட்டர் தூரம் ஏறினால் 2 நட்சத்திர குறியீடும் (2 மதிப்பெண்), 6.5 மீட்டர் தூரம் ஏறினால் 3 நட்சத்திர குறியீடும் (5 மதிப்பெண்) வழங்கப்படும்.
உயரம் தாண்டுதலில் 1.4 மீட்டர் தாண்டினால் 2 நட்சத்திர குறியீடு வழங்கப்படுகிறது. நீளம் தாண்டும் போட்டியில் 3.8 மீட்டர் மற்றும் 4.5 மீட்டர் தூர அளவாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து இந்த தேர்வு வருகிற 6-ந் தேதி வரை நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.