காவலர் பணிக்கான உடற்தகுதியில் 442 பேர் தேர்வு.கயிறு ஏறுதலில் 52 பேர் தகுதி நீக்கம்.

காவலர் பணிக்கான 2-ம் கட்ட உடற்திறனில் 442 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கயிறு ஏறுதலில் 52 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2021-08-04 18:04 GMT
வேலூர்

2.ம் கட்ட தேர்வு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பாக 2.ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கியது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 697 பெண்கள் உள்பட 3 ஆயிரத்து 80 பேருக்கு வேலூர் நேதாஜி மைதானத்தில் உடற்தகுதி தேர்வு நடந்தது. ஒவ்வொரு நாளும் 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதில் இளைஞர்கள் 1,610 பேர் வெற்றி பெற்று 2-ம் கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர். 354 பெண்களும் 2-ம் கட்ட தேர்வுக்கு தேர்வாகியுள்ளனர்.

இந்தநிலையில் ஆண்களுக்கான 2.ம் கட்ட உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. இதில் 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 498 பேர் பங்கேற்றனர்.  அவர்களுக்கு கயிறு ஏறுதல், 100 மற்றும் 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகியவை நடத்தப்பட்டது.

56 பேர் தகுதிநீக்கம்

இதில் கயிறு ஏறுதலில் ஏராளமான இளைஞர்கள் தடுமாறினர். சிலர் சறுக்கிக் கீழே விழுந்தனர். 52 பேர் இலக்கை தொட முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதேபோல நீளம் தாண்டுதலில் ஒருவரும், ஓட்டத்தில் 3 பேரும் என 4 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த தேர்வில் 442 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.
உடற்தகுதிதேர்வினை வேலூர் சரக டி.ஐ.ஜி. பாபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். 


மேலும் செய்திகள்