மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு: தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும்

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு: தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2021-08-04 17:25 GMT
சென்னை,

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ படிப்பு

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான முதன்மை அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், ‘ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் குழு நியமிக்கப்பட்டு, அதன் பரிந்துரை அடிப்படையில், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது’ என்றார்.

69 சதவீத ஒதுக்கீடு

இதற்கு தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ‘தற்போது தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறை அமலில் உள்ளது. அந்த ஒதுக்கீட்டைத்தான் மத்திய அரசும் அமல்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் 27 சதவீத இடஒதுக்கீடு என்பது மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், தமிழக அரசின் இடஒதுக்கீட்டைப் புறக்கணிக்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதை மத்திய அரசின் குழுவும், சுப்ரீம் கோர்ட்டும் ஏற்றுக்கொண்டுள்ளன. எனவே, மாநிலத்தில் பின்பற்றப்பட்டுவரும் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பின்பற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார்.

இழுத்தடிப்பு

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘சுப்ரீம் கோர்ட்டும், இந்த ஐகோர்ட்டும், தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டைத்தான் அமல்படுத்த வேண்டும் என்று தெளிவாக உத்தரவிட்டுள்ளன. எனவே, மருத்துவ படிப்பில் 69 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். ஆனால், இந்த ஐகோர்ட்டு உத்தரவை தீவிரமாக அமல்படுத்தாமல் மத்திய அரசு இழுத்தடிப்பதாக மனுதாரர் குற்றம்சாட்டுகிறார். தற்போது இந்த விவகாரத்தில், மத்திய அரசு நிலையை கேட்டு தெரிவிக்க கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் காலஅவகாசம் கேட்கிறார். இதை ஏற்றுக்கொண்டு விசாரணையை வருகிற 9-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்