திருச்செங்கோட்டில் சர்ச்சைக்குரிய இடத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றப்பட்டது 3 பேர் கைது

திருச்செங்கோட்டில் சர்ச்சைக்குரிய இடத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றப்பட்டது 3 பேர் கைது;

Update: 2021-08-04 17:00 GMT
எலச்சிபாளையம்:
திருச்செங்கோட்டில் சர்ச்சைக்குரிய இடத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
எதிர்ப்பு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள கிரிவலப்பாதை பிரிவில் தேவாலயம் ஒன்று உள்ளது. இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிரிவல விரிவாக்க பாதை, சாலை விரிவாக்கத்திற்காக தேவாலயத்தின் ஒரு பகுதியை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் வலியுறுத்தினர். இதையடுத்து அந்த இடத்தை காலி செய்து சாலை விரிவாக்க பணிகளுக்கு இடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. 
இந்தநிலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் நேற்று முன்தினம் மாலை இந்து அமைப்பினர், பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலையை வைத்து வழிபட தொடங்கினர். இதுகுறித்து அறிந்த அப்பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் விநாயகர் சிலை வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் வீரமணி இந்து முன்னணியினர், பா.ஜனதா கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவருக்கும், இந்து முன்னணியினர், பா.ஜனதாவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
போலீசார் குவிப்பு
இதையடுத்து விநாயகர் சிலையை அகற்றக்கோரி தேவாலயத்தின் முன்பு கிறிஸ்தவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இரு மதத்தினர் இடையே மோதல் ஏற்படும் அபாயம் இருந்ததால் கிராம நிர்வாக அலுவலர் திருச்செங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். 
இந்தநிலையில் நேற்று காலை வருவாய் உதவி கலெக்டர் இளவரசி, கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் செல்லபாண்டியன், மணிமாறன், போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வம், இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு ஆகியோர் சென்று இந்து அமைப்பினர், பா.ஜனதா கட்சியினர் மற்றும் கிறிஸ்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
சிலை அகற்றம் 
இதையடுத்து அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் உரிய ‌அனுமதி இன்றி வைத்ததாக கூறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை அகற்றப்பட்டது. இதுதொடர்பாக இந்து முன்னணியினர், பா.ஜ.க.வை ேசர்ந்த 27-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த போலீசார் அவர்களை தனியார் மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் மாலையில் விடுவித்தனர். 
மேலும் இதுதொடர்பாக போலீசார் திருச்செங்கோடு நாடார் தெருவை சேர்ந்த செல்வம் (வயது 60), கந்தசாமி (50), செங்கோடன் (57) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதையொட்டி அங்குள்ள தேவாலய பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
====

மேலும் செய்திகள்