விக்கிரவாண்டியில் தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களிடம் கொரோனா விழிப்புணர்வு கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்
விக்கிரவாண்டியில் தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களிடம் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதற்கு விழுப்புரம் மாவட்ட கல்வித்துறை மற்றும் போக்குவரத்து, சுகாதாரம், நெடுஞ்சாலை, ஆகிய துறைகள் மற்றும் விக்கிரவாண்டி பேரூராட்சி ஆகியன சார்பில் நடந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், சப்-கலெக்டர் (பயிற்சி) ரூபினா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார், முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகி்த்தனர்.
தடுப்பூசி முகாம்
தொடர்ந்து கலெக்டர் மோகன் முன்னிலையில் அனைவரும் கொரோனா தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பஸ் பயணிகளிடம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்களை கலெக்டர் மோகன் வினியோகம் செய்தார். பின்னர் அவர் கொரோனா தடுப்பூசி முகாமையும் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இதில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன், சிவக்குமார், தாசில்தார் தமிழ்செல்வி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வினோத், பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை, வட்டார கல்வி அலுவலர் தேன்மொழி, இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன், சுங்கச்சாவடி பொதுமேலாளர் முத்து அண்ணாமலை, மோட்டார் வாகன ஆய்வாளர் கோவிந்தராஜ், மாணிக்கம், ஜே.ஆர்.சி. மாவட்ட கன்வீனர் பாபு செல்வதுரை, இணை கன்வீனர் தமிழழகன், சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், ஆய்வாளர் பாபு மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகள், பணியாளர்கள், சாரண சாரணியர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கலை நிகழ்ச்சி
முன்னதாக விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது பெருமாள், ஹேமலதா குழுவினரால் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.