விழுப்புரத்தில் சீருடை பணியாளர் பணிக்கான உடற்திறன் தேர்வு முதல் நாளில் 439 பேர் தகுதி

விழுப்புரத்தில் சீருடை பணியாளர் பணிக்கான உடற்திறன் தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் 439 பேர் தகுதி பெற்றனர்.

Update: 2021-08-04 16:46 GMT
விழுப்புரம், 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில் 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணிகளுக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 2,256 ஆண்கள், 700 பெண்கள் என 2,956 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நடைபெற்றது.

முதல்கட்டமாக ஆண்களுக்கான உடற்தகுதி தேர்வு 5 நாட்களும், பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு 2 நாட்களும் நடந்து முடிவடைந்தது. இதில் 1,593 ஆண்களும், 417 பெண்களும் தகுதி பெற்றனர்.

உடற்திறன் தேர்வு 

இதனை தொடர்ந்து இவர்களில் ஆண்களுக்கான உடற்திறன் தேர்வு நேற்று தொடங்கியது. உடற்திறன் தேர்வின் முதல் நாளில் 500 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இவர்களில் 4 பேர் வரவில்லை. 496 பேர் கலந்துகொண்டனர். முதலாவதாக இவர்களுக்கு கயிறு ஏறுதல் நடத்தப்பட்டது. இதில் 441 பேர் தகுதி பெற்றனர். கயிறு ஏற முடியாத 55 பேர் வெளியேற்றப்பட்டனர்.

அதன் பின்னர் 441 பேருக்கு அவரவர் விருப்பத்தின்                    பேரில் நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல் நடத்தப்பட்டது. இதில் 2 பேர் மட்டும் தகுதியிழந்தனர். மீதமுள்ள 439 பேருக்கு 100 மீட்டர் ஓட்டம் அல்லது 400 மீட்டர் ஓட்டம் நடத்தப்பட்டது.

 100 மீட்டர் இலக்கை 13.50 வினாடிக்குள்ளும், 400 மீட்டர் இலக்கை 70 வினாடிக்குள்ளும் அடைய வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் 100 மீட்டர் ஓட்டத்தில் 5 பேரும், 400 மீட்டர் ஓட்டத்தில் 434 பேரும் கலந்து கொண்டு இலக்கை நோக்கி ஆவேசமாக சீறிப்பாய்ந்து ஓடினர். 

இதன் முடிவில் அவர்கள் அனைவருமே குறிப்பிட்ட வினாடிக்குள் இலக்கை அடைந்து தகுதி பெற்றனர். தொடர்ந்து, இன்றும் (வியாழக்கிழமை) ஆண்களுக்கான உடற்திறன் தேர்வு நடக்கிறது.

அதிகாரிகள் பார்வையிட்டனர்

நேற்று நடைபெற்ற தேர்வை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோவிந்தராஜ், நீதிராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இருதயராஜ், சின்னராஜ், ராஜலட்சுமி, விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலையின் சிறைக்காவலர் ஏழுமலை, தீயணைப்பு அதிகாரிகள் ராபின்காஸ்ட்ரோ, சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்