திண்டுக்கல் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சீனிவாசன் பதவி ஏற்பு

திண்டுக்கல் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சீனிவாசன் பதவியேற்றார்.;

Update: 2021-08-04 16:37 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சீனிவாசன் பதவியேற்றார். 
போலீஸ் சூப்பிரண்டு பதவி ஏற்பு 
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ரவளிபிரியா, தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார். இதையடுத்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சீனிவாசன், திண்டுக்கல்லுக்கு நியமிக்கப்பட்டார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய போலீஸ் சூப்பிரண்டாக சீனிவாசன் நேற்று பதவி ஏற்றார்.
இவருடைய சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆகும். என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், கடந்த 2005-ம் ஆண்டு போலீஸ் துணை சூப்பிரண்டாக போலீஸ் துறையில் பணிக்கு சேர்ந்தார். இதையடுத்து தஞ்சை மாவட்டம் வல்லத்தில் துணை சூப்பிரண்டாக பணியை தொடங்கினார். அதன்பின்னர் கும்பகோணம், தென்காசியில் துணை சூப்பிரண்டாக பணியாற்றிய அவர் பதவி உயர்வு பெற்று, திருச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.
திண்டுக்கல்லில் பணியாற்றியவர்
இதையடுத்து திண்டுக்கல், திருச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து பதவி உயர்வு பெற்று அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக 3 ஆண்டுகள் பணியாற்றினார். இதையடுத்து நெல்லை துணை கமிஷனராகவும், திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டாகவும் சீனிவாசன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
புதிய போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பேணி காப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அதேபோல் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். மேலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும். மாவட்டம் முழுவதும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு விபத்துகள் தடுக்கப்படும். தற்போது கொரோனா காலமாக இருப்பதால் அரசின் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்