ஏலகிரி மலையில் வீட்டை விட்டு விரட்டியதாக மருமகள் மீது பெண் புகார்
வீட்டை விட்டு விரட்டியதாக மருமகள் மீது பெண் புகார்
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள மேட்டுக்கனியூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி மனைவி ராஜம்மாள் (வயது55). கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு ராஜம்மாள் கணவர் கோவிந்தசாமி இறந்துவிட்டார். இவருடைய மகன் சிவகுமார் என்பவருக்கும் தாயலூர் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்பவருக்கும் கடந்த 12 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது சிவகுமார் மத்தியபாதுகாப்பு படை போலீசாக காஷ்மீரில் பணிபுரிந்து வருகிறார். இதனால் ராஜம்மாள் மற்றும் மருமகள் மகாலட்சுமி மற்றும் குழந்தைகள் ஒன்றாக வசித்து வருகின்றனர்.
ராஜம்மாள் மூன்று வீடுகள் கட்டியுள்ளார். இவற்றை மகன், மருமகள் பெயரில் எழுதி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ராஜம்மாளுக்கும், மருமகளுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ராஜம்மாளை வீட்டைவிட்டு விரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவர் அங்குள்ள கோவில் சத்திரத்தில் படுத்து தூங்கி, அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் சாப்பாடு வாங்கி சாப்பிட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் ராஜம்மாள் புகார் மனுவை அளித்தார்.
அதில் தனது மருமகள் என்னை வீட்டை விட்டு வெளியே விரட்டி இரும்பு கம்பியாலும், உருட்டு கட்டையாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தனது வீட்டை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.