திருமூர்த்தி அணையில் இருந்து 4ம் மண்டல பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
திருமூர்த்தி அணையில் இருந்து 4ம் மண்டல பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.;
தளி,
திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
திருமூர்த்தி அணை
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை கட்டப்பட்டுள்ளது. அணைக்கு வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் பி.ஏ.பி. தொகுப்பு அணைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை ஆதாரமாகக்கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
அத்துடன் அம்மாபட்டிகுளம், செங்குளம், பெரியகுளம், வளையபாளையம்குளம் உள்ளிட்ட ஏழு குளங்கள் மூலமாக 2 ஆயிரத்து 786 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. அது தவிர சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தண்ணீர் திறப்பு
இந்த நிலையில் கடந்த மாதம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை தீவிரமடைந்தது. இதன் காரணமாக ஆறுகள் மூலமாக பி.ஏ.பி. தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. ஆனால் பி.ஏ.பி திட்டத்தின் உயிர்நாடியான திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து ஏற்படவில்லை. இதையடுத்து காண்டூர் கால்வாய் மூலமாக பி.ஏ.பி. அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதன் காரணமாக அணையின் நீர் இருப்பும் உயர்ந்து வந்தது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீரை ஒரு சில மணித்துளிகளில் அதிகாரிகள் அடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
அதிகாரிகள் அலட்சியம்
பி.ஏ.பி.பாசன திட்டத்தை ஆதாரமாகக்கொண்டு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றோம். கால்வாய் பராமரிப்பு மற்றும் நீர்மேலாண்மையில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீர் பற்றாக்குறையால் கருகி விடுவது வாடிக்கையாக உள்ளது.
4-வது மண்டலம் தோற்றுவித்த பின்பு ஒரு சில வருடங்கள்தான் ஒரு சுற்றுக்கு 14 நாட்கள் வீதம் 7 நாள் அடைப்பு 7 நாள் தண்ணீர் திறப்பு என்று இருந்தது. அதன் பின்பு ஒருமடை விட்டு ஒருமடை பாசனம் தோற்றுவிக்கப்பட்டது. இதனால் 7 நாட்கள் அடைப்பு 7 நாட்கள் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு என்று இருந்த நிலை மாறி தற்போது மாதத்திற்கு 7 நாட்கள் தண்ணீர் வருகிறது. இது ஒரு சில மடைகளில் மட்டுமே சாத்தியமாக உள்ளது.
அவசரகதியில் புனரமைப்பு பணி
மீதமுள்ள மடைகளில் மாதத்திற்கு 5 நாள், 3 நாள், 2 நாள் என படிப்படியாக குறைந்து இறுதியில் கடைமடைக்கு தண்ணீரே சென்று சேர்வதில்லை. அதுவும் எந்த பயிர்கள் சாகுபடி செய்வதற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்பதும் குறிப்பிடப்படுவதில்லை. இதனால் சாகுபடி பணிகள் பாதிக்கப்படுவதுடன் விவசாயம் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது.
வருடந்தோறும் மே, முதல், ஜூலை வரையிலான கோடை காலத்தில் கால்வாய்களை புனரமைப்பதற்கு அதிகாரிகள் முன்வருவதில்லை. பருவமழை தொடங்கும் முன்போ அல்லது கால்வாயில் தண்ணீர் திறப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு அவசரகதியில் புனரமைப்பு பணியில்ஈடுபடுகின்றனர்.
தண்ணீர் வீணாகிறது
அதைத்தொடர்ந்து கான்கிரீட் கலவை காய்ந்து விடுவதற்கு முன்பே கால்வாயில் தண்ணீரும் திறக்கப்பட்டு விடுகிறது. இதனால் கலவைதண்ணீரில் கரைந்து விடுவதுடன் சேதமும்பெரிதாகி விடுகிறது.
புனரமைப்புப்பணிகள் நடைபெறுகின்ற முறைகேடுகள் காரணமாக சேதமடைந்த கரையின் வழியாக ஏராளமான தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் கடைமடைக்கு தண்ணீர் முழுமையாக சென்று சேருவதில்லை.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறைமுறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதுமட்டுமின்றி பி.ஏ.பி. விளைநிலங்கள் வீட்டுமனைகளாகவும், காற்றாலை அமைப்பதற்கும், பிற உபயோகத்திற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதை ஆயக்கட்டில் இருந்து நீக்கினால் தற்போது உள்ள நிலங்களுக்கு கூடுதல் சுற்றுகள் தண்ணீர் வழங்க இயலும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தோம். அதையும் நிறைவேற்றித்தரவில்லை.
தண்ணீர் நிறுத்தம்
ஆனால் மொத்த நிலங்களுக்கும் சேர்த்து கால்வாயில் தண்ணீர் எடுக்கப்படுகிறது. அந்ததண்ணீர் எங்கு செல்கிறது? என்ன ஆகிறது ? என்பது இன்று வரை புதிராகவே உள்ளது. கால்வாய்களில் சீரமைப்புபணி மேற்கொள்ளாமல் 4-ம் மண்டல பாசனத்திற்கு நேற்று முன்தினம் மாலை அவசரகதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் ஒரு சில மணித்துளியில் தண்ணீரைஅதிகாரிகள் அடைத்து விட்டனர்.
இதனால் சாகுபடி பணிகளை எதிர்நோக்கி இருந்த விவசாயிகள் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். எனவே பி.ஏ.பி. பாசன திட்டத்தில் நீர் மேலாண்மையை முறைபடுத்துவதுடன், கால்வாய்களை குறித்த காலத்தில் நல்ல முறையில் சீரமைப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.