தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.;

Update: 2021-08-04 15:40 GMT
கிருஷ்ணகிரி:

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.

உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வணிகர் சங்க பிரதிநிதிகள், ஓட்டல் சங்க பிரதிநிதிகள், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆகியோர் கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் புகையிலை, பான் மசாலா, குட்கா ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் கலெக்டர் உறுதிமொழியை படிக்க, அனைவரும் திரும்ப படித்து ஏற்று கொண்டனர். தொடர்ந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான் மசாலா ஆகிய பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
சான்றிதழ்கள் வழங்கினார் 
அதைத் தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் சுகாதாரமாகவும், தரமானதாகவும் செயல்பட்டு வரும் உணவகங்களுக்கு தரச்சான்றுகளை கலெக்டர் வழங்கினார். அந்த வகையில் ஓசூர் உணவக உரிமையாளர்கள் 8 பேருக்கும், கிருஷ்ணகிரி உணவக உரிமையாளர்கள் 3 பேருக்கும் உணவு பாதுகாப்பு தர சான்றுகளை வழங்கினார்.
முன்னதாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மூலம் அமைக்கப்பட்டிருந்த ரத்த சோகை விழிப்புணர்வு அரங்கம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பால் அமைக்கப்பட்டிருந்த அயோடின் உப்பு அரங்கத்தை கலெக்டர் பார்வையிட்டார்.
இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், மாவட்ட நியமன அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்