தர்மபுரியில் பொது காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்
பொது காப்பீட்டு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
பொது காப்பீட்டு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்த போராட்டம்
பொதுகாப்பீட்டு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி மாவட்டத்தில் 4 பொது காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான காப்பீட்டு வணிகம் நேற்று பாதிக்கப்பட்டது.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தை முன்னிட்டு தர்மபுரியில் அகில இந்திய பொது காப்பீட்டு ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பின் கோவை மண்டல இணை செயலாளர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் உமாசங்கர், இன்பரசு, ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்க சேலம் கோட்ட இணை செயலாளர் மாதேஸ்வரன், முகவர் சங்க நிர்வாகி கோவிந்தராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
கைவிட வேண்டும்
இந்த போராட்டத்தில் பொது காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். காப்பீட்டுதாரர்களின் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது காப்பீட்டு நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் அதிகார வரம்பு சார்ந்த பொறுப்புகளில் இருந்து மத்திய அரசு விலக கூடாது என்ற கோரிக்கைகள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதேபோன்று அரூர், பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பொது காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
---