பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.14.71 விலை நிர்ணயம்

இந்த மாத குறைந்தபட்ச விலையாக பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.14.71 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-08-04 15:03 GMT
ஊட்டி,

இந்த மாத குறைந்தபட்ச விலையாக பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.14.71 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

தேயிலை சாகுபடி

நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தனியார் தேயிலை தொழிற்சாலை மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனர். 

மாதாந்திர விலை அடிப்படையில் அவர்களுக்கு தொழிற்சாலை நிர்வாகம் பணம் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் ஒரு கிலோ பச்சை தேயிலைக்கு ரூ.24-க்கு மேல் விலை இருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ரூ.14.71 ஆக நிர்ணயம்

ஆனால் இந்த ஆண்டில் விலை குறைந்து கொண்டே வருகிறது. தற்போது சீதோஷ்ண காலநிலை மற்றும் தொடர் மழையால் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. இருப்பினும் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இந்த நிலையில் இந்த மாதத்துக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து தேயிலை வாரிய துணை இயக்குனர் ஹரிபிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

இந்த மாதத்தில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச சராசரி விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.14.71 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த மாத தேயிலைத்தூள் விற்பனை சராசரியை கொண்டு கணக்கிடப்படுகிறது. இந்த விலையை அனைத்து தொழிற்சாலைகளும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

விலை குறைவு

இந்த விலை வழங்காத தொழிற்சாலைகள் குறித்து விவசாயிகள் தகவல் தெரிவிக்கலாம். தேயிலை வாரியத்தின் வளர்ச்சி அதிகாரிகள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், உதவி இயக்குனர்கள் குறைந்தபட்ச விலை விவசாயிகளுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

கடந்த மாதம் ஒரு கிலோ பச்சை தேயிலைக்கு ரூ.16.74 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த மாதத்தில் 2 ரூபாய் 3 பைசா குறைந்து, ரூ.14.71 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்