ஆற்றுவாய்க்கால்களை தூர்வாரியதால் மழை வெள்ள பாதிப்பு குறைந்தது

கூடலூர் பகுதியில் ஆற்று வாய்க்கால்கள் முறையாக தூர்வாரியதால் மழை வெள்ள பாதிப்புகள் குறைந்தது. இதனால் அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

Update: 2021-08-04 15:01 GMT
கூடலூர்,

கூடலூர் பகுதியில் ஆற்று வாய்க்கால்கள் முறையாக தூர்வாரியதால் மழை வெள்ள பாதிப்புகள் குறைந்தது. இதனால் அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

மழை வெள்ள பாதிப்பு

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இக்காலகட்டத்தில் ஆற்றுவாய்க்கால்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மழை தீவிரமாக பெய்யும் சமயத்தில் வாய்க்கால்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. 

இதனால் வீடுகள், விவசாய பயிர்கள் சேதம் அடைந்து வருகிறது. ஆற்று வாய்க்கால்களை முறையாக தூர்வாராததாலும், ஆக்கிரமிப்புகள் இருப்பதாலும் ஊருக்கு தண்ணீர் வருவதாக கூறப்பட்டது. இதனால் கூடலூர் பகுதியில் உள்ள பாடந்தொரை, புத்தூர்வயல் தேன்வயல், இருவயல், குற்றிமுற்றி உள்பட பல இடங்களில் மழைக்காலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது.

சீரமைப்பு

இதைத்தொடர்ந்து கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் குழு கூடலூர் பகுதியில் ஆய்வு நடத்தியது. அப்போது அனைத்து இடங்களிலும் உள்ள ஆற்று வாய்க்கால்களை உடனடியாக தூர்வார உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதிப்புகள் ஏற்படும் இடங்களில் கடந்த மாதம் முறையாக தூர்வாரும் பணி நடைபெற்றது. மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வாய்க்கால்கள் விரிவுப்படுத்தப்பட்டது.

பாராட்டு

இந்த நிலையில் கூடலூர் பகுதியில் சமீபத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பாதிப்புகள் அதிகமாக நடைபெறும் பாடந்தொரை, புத்தூர்வயல், இருவயல் உள்பட பெரும்பாலான இடங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்படவில்லை. 

வாய்க்கால்கள் முறையாக தூர்வாரியதால் பாதிப்பு குறைந்து உள்ளது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்