நீலகிரி எல்லைகளில் இன்று முதல் கொரோனா பரிசோதனை தீவிரம்
கேரளாவில் தொற்று அதிகரித்து வருவதால் நீலகிரி எல்லைகளில் இன்று முதல் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்படுகிறது என்று சுகாதார பணிகள் துணை இயக்குனர் பேட்டியின்போது கூறினார்.
ஊட்டி,
கேரளாவில் தொற்று அதிகரித்து வருவதால் நீலகிரி எல்லைகளில் இன்று முதல் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்படுகிறது என்று சுகாதார பணிகள் துணை இயக்குனர் பேட்டியின்போது கூறினார்.
‘நெகட்டிவ்’ சான்றிதழ்
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு உள்ளன. மேலும் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டு, சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்படுகிறது. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து வர இ-பதிவு மற்றும் கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். அவர்கள் சுற்றுலா தலங்கள் திறக்கப்படாததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
தொற்று அதிகரிப்பு
இதற்கிடையே கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கையாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
அதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் கேரளா மாநிலத்தை ஒட்டி நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறியதாவது:- கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வருகிறவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
தீவிர பரிசோதனை
அதனை காண்பித்தால்தான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இல்லையென்றால் அனுமதி இல்லை. நீலகிரியை சேர்ந்தவர்கள் கேரளா சென்று திரும்பினாலும் கொரோனா பரிசோதனை முடிவு கட்டாயம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனைச்சாவடிகளில் கொரோனா பரிசோதனை நிறுத்தப்பட்டு இருந்தது.
கேரளாவில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மாவட்ட எல்லையில் உள்ள நாடுகாணி, பாட்டவயல், எருமாடு, தாளூர், கக்கநல்லா ஆகிய 5 சோதனைச்சாவடிகளில் தீவிரமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். தற்போது சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை மற்றும் கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றுகள் உள்ளதா என்று தீவிரமாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.