பூண்டி ஏரி நிரம்பி வருவதால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறக்க அதிகாரிகள் முடிவு

பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 9 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

Update: 2021-08-04 05:53 GMT
சென்னை,

சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஜூன் மாதம் 16-ந் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியில் நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 30.95 அடி பதிவானது. 1,965 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 9 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க ஆந்திர அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் நேற்றுவரை 2.31 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது. ஏரி நிரம்பி வருவதால் வந்து சேர உள்ள தண்ணீரை புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்க தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடும் இணைப்பு கால்வாயில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் நாளை (வியாழக்கிழமை) முடிவடைய வாய்ப்புள்ளது.

இதையடுத்து வருகிற(வெள்ளிக்கிழமை) பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்துவிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்