திடக்கழிவு உற்பத்தியாளர்கள் விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம்
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு உற்பத்தியாளர்கள் விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம்.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சராசரியாக சுமார் 5 ஆயிரம் டன் குப்பைகள் உருவாகிறது. திடக்கழிவு மேலாண்மை விதி படி நாளொன்றுக்கு 100 கிலோவிற்கு மேல் திடக்கழிவு உற்பத்தி செய்யும் திடக்கழிவு உற்பத்தியாளர்கள் தங்கள் வளாகத்திற்குள்ளேயே திடக்கழிவுகளை தரம்பிரித்து மக்கும் குப்பையினை உரமாக்கிடவும், மக்காத குப்பையினை மறுசுழற்சியாளர்களிடம் ஒப்படைக்கவும் வேண்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அதிகளவில் திடக்கழிவுகளை உருவாக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மறுசுழற்சி செய்வதற்கான சேவைகளை பெறுவதற்கு மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/department/solid-waste-management/#service என்ற இணையதள இணைப்பில் உள்ள சேவை வழங்குநர்களின் தொடர்பு கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றாத அதிகளவு திடக்கழிவு உருவாக்குபவர்கள் திடக்கழிவு மேலாண்மை விதிபடி, ஒரு விதிமீறலுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.