மனைவியுடன் பா.ம.க. பிரமுகர் கொலை:- உறவினர் உள்பட 3 பேர் கைது
திருத்தணியை சேர்ந்த பா.ம.க. பிரமுகர் மனைவியுடன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் தீர்த்து கட்டியது விசாரணையில் தெரியவந்தது.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மாருதி நகரை சேர்ந்தவர் சஞ்சீவி. பா.ம.க. பிரமுகர். இவரது மனைவி மாலா. பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். கடந்த மாதம் 29-ந்தேதி ஆந்திர மாநிலம் சென்ற கணவன், மனைவி இருவரும் வீடு திரும்பவில்லை.
இதனால் அவர்கள் மாயமானதாக சஞ்சீவியின் தம்பி பாலு திருத்தணி போலீசில் புகார் செய்தார். அவரது வீட்டில் சோதனை செய்தபோது பீரோவில் வைத்திருந்த பணம், நகை மற்றும் முக்கிய ஆவணங்கள் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களது உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சஞ்சீவியிடம் அவரது தங்கை மகனான திருத்தணியை சேர்ந்த ரஞ்சித் குமார் (வயது 27) ரூ.1 கோடி வரை கடன் வாங்கி கொண்டு் ரூ.50 லட்சத்தை திருப்பி செலுத்தி உள்ளார். மீதமுள்ள ரூ.50 லட்சத்தை திருப்பி தரும்படி சஞ்சீவி ரஞ்ஜித் குமாரிடம் கேட்டு வந்தார்.
இந்த நிலையில் சஞ்சீவி தனது மனைவி மாலாவுடன் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அப்பலகொண்டாவில் உள்ள கோவிலுக்கு செல்ல விரும்புவதாகவும் தங்களை அங்கு அழைத்து செல்லுமாறு ரஞ்சித்குமாரை கேட்டுக்கொண்டார்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட ரஞ்சித்குமார் அவர்களை காரில் அழைத்துக்கொண்டு அப்பலகொண்டா நோக்கி சென்றார். திருத்தணியை அடுத்த சிங்கராஜபுரம் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமாரின் நண்பர்களான விமல்ராஜ் (32), ராபர்ட் என்கிற ரஞ்சித் (32) ஆகியோருடன் சேர்ந்து சஞ்சீவி, அவரது மனைவி மாலா ஆகியோரின் கழுத்தை நெரித்துக்கொலை செய்து அங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்திர கானிப்பள்ளி என்ற பகுதியில் உள்ள காப்பு காட்டில் உள்ள புதரில் வீசி விட்டு சென்றதும் தெரியவந்தது.
போலீசார் இதை கொலை வழக்காக மாற்றி ரஞ்சித் குமார், விமல்ராஜ், ராபர்ட் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் திருத்தணி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.