பெரியபாளையம் அருகே பிளம்பர் வெட்டிக்கொலை

பெரியபாளையம் அருகே பிளம்பர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.;

Update: 2021-08-04 04:36 GMT
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் நேற்று மாடு மேய்க்க சென்றவர்கள் அந்த பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக வெங்கல் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது 24 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதை கண்டனர். இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில் வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமார் மற்றும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

இறந்து கிடந்தது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மதன்குமார் (வயது 24) என்பதும் பிளம்பர் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அவர் திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், பூச்சிஆத்திபேடு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார். அவருடன் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மேலும் 5 பேர் தங்கி இருந்தனர் என்பதும் தெரியவந்தது. போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கூறியதாவது.

மதன்குமார் கடந்த சனிக்கிழமை அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அங்கு பணம் இல்லை. வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் அவரை வீட்டின் அருகே வழிமறித்து செலவுக்கு பணம் கொடு என்று கத்தியை காட்டி மிரட்டினர். மதன்குமார் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார்.

நாங்கள் அவரை காப்பாற்ற முயன்றோம். ஆனால், மர்ம நபர்கள் இருவரும் மதன்குமாரை சரமாரியாக கத்தியால் வெட்டி அங்குள்ள கொசஸ்தலை ஆற்றில் வீசிவிட்டு சென்று விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மதன்குமார் தாக்கப்பட்டது குறித்து ஏன் சம்பவம் நடந்த அன்றே தெரிவிக்கவில்லை. உடன் தங்கி இருந்த இவர்களுக்கும் கொலைக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். உடன் தங்கி இருந்த 5 பேர், மேலும் 2 பேர் என 7 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்