கொரோனா பரவலை தடுக்க தரிசனத்துக்கு தடை: கோவில்களின் வாசலில் சூடம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு

கொரோனா பரவலை தடுக்க தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் சேலத்தில் கோவில்களின் வாசலில் பக்தர்கள் சூடம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

Update: 2021-08-03 22:14 GMT
சேலம்:
கொரோனா பரவலை தடுக்க தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் சேலத்தில் கோவில்களின் வாசலில் பக்தர்கள் சூடம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
பக்தர்கள் தரிசனத்துக்கு தடை
சேலத்தில் ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழாக்கள் களைகட்டும். ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, ஆடிப்பூரம், ஆடி வெள்ளி, வரலட்சுமி நோன்பு மற்றும் ஆடிப்பெருக்கு என ஆடி மாதம் முழுவதும் பல்வேறு விசேஷங்கள் வரும். குறிப்பாக ஆடிப்பெருக்கு நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது ஐதீகம். ஆகையால் அன்றைய தினம் காவிரி அன்னையை பொதுமக்கள் வழிபடுவர். மேலும் புதுமண தம்பதிகள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வார்கள்.
கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஆடிப்பெருக்கையொட்டி நேற்று சேலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை மட்டும் நடந்தது. தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 
வாசலில் சூடம்
சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் நேற்று பூட்டப்பட்டு இருந்தது. இருந்தாலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் வாசலில் சூடம் ஏற்றி வழிபட்டனர். மேலும் வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட கூழ் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 
இதேபோல் சேலம் அய்யந்திருமாளிகை பகுதியில் உள்ள பூட்டு முனியப்பன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அங்கு வந்த பக்தர்கள் கோவில் வாசல் முன்பு சூடம் ஏற்றி வழிபட்டனர். ஆடிப்பெருக்கையொட்டி சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. 
வெறிச்சோடின
ஆடிப்பெருக்கையொட்டி ஆண்டுதோறும் சேலம் மாமாங்கத்தில் உள்ள செயற்கை நீரூற்றில் பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து சாமி சிலைகளை கொண்டு வந்து சுத்தம் செய்து, பின்னர் அலங்காரம் செய்து பூஜைகளை நடத்தி வழிபடுவர். ஆனால் கொரோனா காரணமாக இந்த ஆண்டு அங்கு விழா ரத்து செய்யப்பட்டதால் செயற்கை நீருற்று அமைக்கப்படும் பகுதி மற்றும் முனியப்பன் கோவில் திடல் ஆகியவை வெறிச்சோடி காணப்பட்டன.
இதே போல சேலம் டவுன் முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சாமி ஊர்வலம்  நடைபெற்றது. பல்வேறு அபிஷேக பூஜைகளும் நடந்தன.

மேலும் செய்திகள்