ஆசனூர் சாலையில் குட்டியுடன் வாகனத்தை வழிமறித்த யானை

ஆசனூர் சாலையில் குட்டியுடன் வாகனத்தை வழிமறித்த யானை

Update: 2021-08-03 22:07 GMT
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் சத்தியமங்கலம், ஆசனூர், கேர்மாளம், ஜீர்கள்ளி, தாளவாடி உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதனால் வாகன போக்குவரத்து எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். மேலும் வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி அடிக்கடி சாலையை கடக்கின்றன. தற்போது தாளவாடி மற்றும் கர்நாடகத்தில் விளையும் கரும்புகள், லாரி மூலம் சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த கரும்புகளை ருசித்து பழகிய யானைகள் சாலையில் முகாமிட்டு வருவது தொடர்தையாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் ஆசனூரை அடுத்த காராப்பள்ளம் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரியை எதிர்ப்பார்த்து குட்டியுடன் தாய் யானை சாலையில் உலா வந்தது. யானையை கண்டதும், வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை சற்று தூரத்தில் நிறுத்தினர். இதன்காரணமாக அந்த சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அந்த யானை சிறிது நேரத்தில் தானாக வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

மேலும் செய்திகள்