மைத்துனரை கொலை செய்ய முயன்றவருக்கு ஜெயில் தண்டனை
மைத்துனரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றவருக்கு ஒரு வருடம் ஜெயில் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரை தாட்கோ நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது அக்காள் அந்தோணியம்மாளின் கணவர் மாடசாமி (வயது 67). இவர் தென்காசி அருகே உள்ள இலஞ்சி மேல பொன்நகர் தெருவை சேர்ந்தவர். இந்த தம்பதிக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக இவர்கள் இருவரும் சுமார் 14 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். அந்தோணியம்மாள் சாமிநாதனின் வீட்டில் வசித்து வருகிறார்.
அந்தோணியம்மாள் தன்னுடன் வாழாததற்கு சாமிநாதன் தான் காரணம் என்று மாடசாமி நினைத்து அவர் மீது நீண்ட நாட்களாக முன்விரோதத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 19-12-2013 அன்று சாமிநாதன் செங்கோட்டை பஸ் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மாடசாமி அவரை அவதூறாக பேசி, கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்டினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு தென்காசி முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி பி.எஸ்.ரஸ்கின் ராஜ் இந்த வழக்கை விசாரித்து, மாடசாமிக்கு ஒரு வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு கூறினார்.
மாடசாமி வயதானவர் என்பதாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாலும் குறைந்தபட்ச தண்டனை வழங்குவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராமச்சந்திரன் ஆஜரானார்.