ஆசிரியை வீட்டில் 75 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை
தக்கலை அருகே ஆசிரியை வீட்டில் 75 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
பத்மநாபபுரம்:
தக்கலை அருகே ஆசிரியை வீட்டில் 75 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
ஆசிரியை வீடு
தக்கலை முத்தலக்குறிச்சியை அடுத்த மச்சக்குளம் பகுதியை சேர்ந்தவர் கிரேஸ்மேரி (வயது 57). இவர் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய கணவர் வில்சன், கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மகன் விபின், கோவில்பட்டியில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கதவு உடைந்து கிடந்தது
கொரோனா பரவல் காரணமாக கிரேஸ் மேரி, தன்னுடைய சொந்த ஊரிேலயே இருந்தார்.
இந்த நிலையில் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மணமேல்குடியில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அருகில் வசிக்கும் மூதாட்டி நேசத்திடம் வீட்டை பார்த்து கொள்ளும்படி கூறியுள்ளார். அதன்படி நேசம் நேற்று காலை கிரேஸ் மேரி வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக சென்றார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நேசம் உடனே கிரேஸ் மேரிக்கு தகவல் தெரிவித்தார்.
75 பவுன் நகை கொள்ளை
அவர் உறவினரிடம் தகவல் தெரிவித்து வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார். உடனே உறவினரும் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ மற்றும் மேஜைகள் உடைக்கப்பட்டு, அவற்றில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர், கிரேஸ் மேரியிடம் பேசினார்.
அப்போது தான் பீரோவில் கிரேஸ்மேரி வைத்திருந்த 75 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் கொள்ளை போனது தெரிய வந்தது. வீடு பூட்டி கிடந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என அவர்கள் கருதினர்.
மோப்பநாய்
இதுபற்றி தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர்.
மோப்பநாய் ஏஞ்சலும் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீடு முழுவதும் மோப்பம் பிடித்தபடி, வீட்டில் இருந்து வெளியே ஓடி கொல்லன்விளை சாலை வரை சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டது.
3 தனிப்படை அமைப்பு
கொள்ளையர்களை பிடிக்க துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியை வீட்டில் 75 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.