அம்மன் கோவில்களில் தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம்

ஆடி செவ்வாய்க்கிழமையான நேற்று கோவில்களில் சாமி தாிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2021-08-03 21:34 GMT
நாகா்கோவில்:
ஆடி செவ்வாய்க்கிழமையான நேற்று கோவில்களில் சாமி தாிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
 ஆடிபெருக்கு
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் கோவில்களில் கூழ், கஞ்சி உள்ளிட்டவை காய்ச்சி அம்மனுக்கு படைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. 
அதேபோல  இந்த ஆண்டும் ஆடி மாதம் முதல் மற்றும் 2-வது செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 
நேற்று ஆடி மாத 3-வது செவ்வாய்க்கிழமை ஆகும். அதோடு ஆடி பெருக்கும் சேர்ந்தே வந்தது. இதனால் அதிகாலையில் இருந்தே அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் கூட தொடங்கியது. பக்தர்கள் குடும்பம் குடும்பமாக கோவில்களில் திரண்டனர். 
பக்தர்கள் ஏமாற்றம்
ஆனால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 1-ந் தேதியில் இருந்து நேற்று வரை 3 நாட்கள் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் கோவில்களில் திரண்ட பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதன் காரணமாக பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் எப்படியேனும் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கோவிலுக்கு வெளிேய நின்றபடி அம்மனை தரிசனம் செய்தனர்.
அதே சமயம் கோவிலில் வழக்கமான பூஜை, அபிஷேகங்கள் நடந்தன. இந்த பூஜை மற்றும் அபிஷேகத்தை கோவிலின் நுழைவு வாயிலில் நின்றபடி பக்தர்கள் பார்த்து வணங்கினர். அந்த வகையில் நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவில், வடசேரி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடம், புலவர்விளை முத்தாரம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் வெளியே நின்றபடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மண்டைக்காடு கோவில்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். ஆனால் தற்காலிக தடையால் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் கோவிலில் வெளியே நின்று அம்மனை வழிபட்டனர். நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் மண்டைக்காடு கோவில் பகுதி களைக்கட்டியது.

மேலும் செய்திகள்