தீரன் சின்னமலை விழா: சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை- முன்னாள் அமைச்சர்களும் பங்கேற்பு
தீரன் சின்னமலை விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அறச்சலூர்
தீரன் சின்னமலை விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
எடப்பாடி பழனிசாமி
அறச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் தீரன் சின்னமலைக்கு புகழ் அஞ்சலி செலுத்தினா்.
நேற்று காலை ஓடாநிலைக்கு வந்த முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணிமண்டபத்தில் உள்ள தீரன் சின்னமலை உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதுபோல அங்குள்ள முழு உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
முன்னாள் அமைச்சர்கள்
அவருடன் முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களுமான கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, கே.சி.கருப்பணன், முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம், முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி ஆகியோரும் மாலை அணிவித்தனர்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க் கள் ஜெயக்குமார்(பெருந்துறை), பண்ணாரி(பவானிசாகர்), முன்னாள் எம்.பி.க்கள் செல்லக்குமார சின்னையன், சத்யபாமா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.பி.சிவசுப்பிரமணி, கே.எஸ்.தென்னரசு, பூந்துறை பாலு, ஆர்.என்.கிட்டுசாமி, பகுதி செயலாளர்கள் ரா.மனோகரன், கே.சி.பழனிச்சாமி, ஜெகதீஷ், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கதிர்வேல், ஒன்றியக்குழு தலைவர் கணபதி, துணைத்தலைவர் மயில் என்கிற சுப்பிரமணி, கொடுமுடி ஒன்றிய செயலாளர் கலைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.