கர்நாடக மந்திரிசபை இன்று விரிவாக்கம்;24 பேர் மந்திரியாக பதவி ஏற்கிறார்கள்

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் இன்று (புதன்கிழமை) நடப்பதாகவும், 24 பேர் மந்திரிகளாக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-08-03 21:33 GMT
பெங்களூரு: கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் இன்று (புதன்கிழமை) நடப்பதாகவும், 24 பேர் மந்திரிகளாக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒப்புதல் வழங்கவில்லை

கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா கடந்த 26-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜனதா கொள்கைப்படி வயது மூப்பு காரணமாக அவர் பதவி விலகினார். இதைத்தொடர்ந்து புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டார். 

அவர் கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அன்று அவர் ஒருவர் மட்டுமே பொறுப்பேற்றார். அவர் பதவி ஏற்று ஒரு வாரம் ஆகிவிட்டது. ஒரு வாரத்தில் மந்திரிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று பசவராஜ் பொம்மை பதவி ஏற்ற தினத்தன்று கூறினார். ஆனால் ஒரு வாரமாகியும் மந்திரிகளின் பெயர் பட்டியலுக்கு பா.ஜனதா மேலிடம் இன்னும் ஒப்புதல் தராமல் இருந்தது.

கர்நாடகத்தில் கடலோர, வட கர்நாடக மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மக்களின் கஷ்டங்களை கேட்டு உதவி செய்ய அதிகாரிகளை தவிர்த்து அரசின் பிரதிநிதிகள் இல்லாத நிலை உள்ளது. இன்னொருபுறம் கர்நாடகத்தில் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் கொரோனா 3-வது அலை தொடங்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ள நிவாரண பணிகள்

இதற்கிடையே மந்திரி பதவிக்கு பா.ஜனதாவில் கடும் போட்டி எழுந்துள்ளது. யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பது குறித்து முடிவு எடுக்க முடியாமல் பா.ஜனதா மேலிடம் திணறியது. மண்டலம், சாதி அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது. கர்நாடகத்தில் ஆட்சி நிர்வாகம் முடங்கிவிட்டதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. வெள்ள நிவாரண பணிகள், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மந்திரிகள் இல்லாததால் மக்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி டெல்லி சென்ற முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, நேற்று முன்தினம் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தினார். அதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இதையடுத்து பசவராஜ் பொம்மை டெல்லியிலேயே தங்கினார். இந்த நிலையில் பசவராஜ் பொம்மை நேற்று மீண்டும் ஜே.பி.நட்டா நேற்று நேரில் சந்தித்து பேசினார். அத்துடன் உள்துறை மந்திரி அமித்ஷாவையும் அவர் சந்தித்தார்.

மந்திரிசபை விரிவாக்கம்

அப்போது யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் பசவராஜ் பொம்மை எடுத்துச் சென்ற மந்திரிகளின் பெயர் பட்டியலில் சிலருக்கு பதவி வழங்க பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் ஆட்சேபனை தெரிவிப்பதாகவும், அதனால் அந்த மந்திரி பட்டியலை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் பசவராஜ் பொம்மை டெல்லியில் தங்கியிருந்து வருகிறார்.  

மந்திரிசபை விரிவாக்கம் இன்று (புதன்கிழமை) மதியம் 2.15 மணியளவில் ராஜ்பவனில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 24 பேர் மந்திரிகளாக பதவி ஏற்க இருக்கிறார்கள். அவர்களுக்கு கவர்னர் தாவர் சந்த் கெலாட் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

புதியவர்களுக்கு வாய்ப்பு

மந்திரிசபையில் புதியவர்களுக்கு தான் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பசவராஜ் பொம்மைக்கு பா.ஜனதா மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படியே மந்திரிகளின் பெயரும் இறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் சதீஸ்ரெட்டி, அரவிந்த் பெல்லத், ஹாலாடி சீனிவாசஷெட்டி, ராஜூகவுடா, பூர்ணிமா உள்ளிட்டோருக்கு பதவி கிடைப்பது உறுதி என்று சொல்லப்படுகிறது. எடியூரப்பா மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த மூத்த மந்திரிகளுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஈசுவரப்பா, கோவிந்த் கார்ஜோள், உமேஷ்கட்டி உள்ளிட்ட தலைவர்கள் பீதியில் உள்ளனர்.

அதே நேரத்தில் மும்பை நண்பர்களில் 5 பேருக்கு வாய்ப்பு கிடைக்காது என்றும், மற்றவர்களுக்கு மந்திரி பதவி கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஸ்ரீமந்த் பட்டீல், ஆர்.சங்கர், எம்.டி.பி.நாகராஜ், நாராயணகவுடா, சிவராம் ஹெப்பார் ஆகியோருக்கு பதவி கிடைக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு மந்திரி பதவிக்கு இணையான வாரிய தலைவர் பதவி வழங்க பசவராஜ் பொம்மை திட்டமிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்