விவசாயிகள் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை

விஜயநகர் அருகே விவசாயிகள் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது.

Update: 2021-08-03 21:33 GMT
விஜயநகர்: விஜயநகர் அருகே விவசாயிகள் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. 

சிறுத்தையை பிடிக்க கூண்டு

விஜயநகர் மாவட்டம் ஹரப்பனஹள்ளி அருகே சிக்கமஜ்ஜகெரே கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த பசப்பா, மஞ்சப்பா, பூஜாரி, காலேஷ், விருபாக்சப்பா ஆகிய 5 விவசாயிகளுக்கு சொந்தமான தோட்டங்கள் உள்ளது. அந்த தோட்டத்தில் விவசாயிகள் வளர்த்து வரும் ஆடு, மாடுகளை ஒரு சிறுத்தை கடந்த சில நாட்களாக கொன்று தின்று வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட ஒரு பசு மாட்டை, சிறுத்தை அடித்து கொன்று தின்று இருந்தது.

இதுபற்றி வனத்துறைக்கு, விவசாயிகள் தகவல் தெரிவித்திருந்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, மாடுகளை கொன்று தின்று வரும் சிறுத்தையை பிடிக்க விவசாயிகளே முன்வந்தனர். இதையடுத்து, 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை கொன்று தின்று இருந்த பசு மாட்டின் மீதி இறைச்சியை, தோட்டத்தில் இரும்பு கூண்டு அமைத்து, அதற்குள் விவசாயிகள் வைத்திருந்தனர்.

விவசாயிகளே பிடித்தனர்

இரும்பு கூண்டுவுக்குள் மாட்டு இறைச்சி இருப்பதை தின்பதற்காக, நேற்று காலையில் சிறுத்தை வந்திருந்தது. சிறுத்தையை எதிர்பார்த்து விவசாயிகளும் காத்திருந்தனர். கூண்டுக்குள் சென்று இறைச்சியை தின்று கொண்டு இருந்த போது, அதன்கதவை விவசாயிகள் மூடினார்கள். இதனால் கூண்டில் இருந்து சிறுத்தையால் வெளியே தப்பிக்க முடியாமல் போனது. இதுபற்றி வனத்துறையினருக்கு, விவசாயிகள் தகவல் தெரிவித்தார்கள்.

அவர்கள் விரைந்து வந்து கூண்டில் சிக்கிய சிறுத்தையை மீட்டு சென்றார்கள். திறமையாக செயல்பட்டு சிறுத்தையை பிடித்த விவசாயிகளை, வனத்துறை அதிகாரிகள் பாராட்டி உள்ளனர். சிறுத்தை நடமாட்டத்தால் பீதியில் இருந்த விவசாயிகள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்