கொரோனா ஊரடங்கால் தரிசனத்துக்கு தடை நடை சாத்தப்பட்டும் கோவில் முன்பு வழிபட்ட பக்தர்கள்

கொரோனா ஊரடங்கால் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் நடை சாத்தப்பட்டும் கோவில் முன்பு பக்தர்கள் வழிபட்டனர்.

Update: 2021-08-03 21:32 GMT
ஈரோடு
கொரோனா ஊரடங்கால் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் நடை சாத்தப்பட்டும் கோவில் முன்பு பக்தர்கள் வழிபட்டனர்.
பண்ணாரி அம்மன் கோவில்
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஆடிப்பெருக்கு அன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள் திறக்கப்படாது என்று மாவட்ட கலெக்டர் அறிவித்திருந்தார்.
அதன்படி ஆடிப்பெருக்கான நேற்று சத்தியமங்கலத்தை அடுத்த பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலுக்கு காலை 6 மணியில் இருந்தே பக்தர்கள் வர தொடங்கினார்கள். கோவில் நடை சாத்தப்பட்டிருந்ததால் அதன் நுழைவுவாயில் முன்பு தேங்காய், பழம் வைத்து தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி வணங்கினார்கள். மேலும் நேர்த்திக்கடனுக்காக தாங்கள் கொண்டுவந்த உப்பு, மிளகு ஆகியவைகளை நுழைவுவாயிலில் உட்பகுதியில் தூவி அம்மனை வழிபட்டு் சென்றார்கள்.
சென்னிமலை முருகன் கோவில்
இதேபோல் சென்னிமலை முருகன் கோவிலுக்கு நேற்று அதிகாலை முதல் சென்னிமலையை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து குடும்பம், குடும்பமாக ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். ஆனால் அடிவாரத்திலேயே கோவில் நிர்வாகிகள் மூலம் மலைப்பாதை மற்றும் படிக்கட்டுகள் வழியாக முருகன் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதை தடுக்கும் வகையில் தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மலைமேல் உள்ள முருகன் கோவிலை பார்த்து வணங்கி சென்றனர்.
எக்கட்டாம்பாளையம்
ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று சென்னிமலை அருகே எக்கட்டாம்பாளையம், சொக்கநாதபாளையம், அய்யம்பாளையம், பசுவபட்டி, முருங்கத்தொழுவு ஆகிய ஊர்களில் உள்ள மாரியம்மன் கோவில்கள், தொட்டம்பட்டி, சில்லாங்காட்டுவலசு ஆகிய ஊர்களில் உள்ள மாகாளியம்மன் கோவில்கள் மற்றும் மைலாடி செல்லாண்டியம்மன், புதுப்பாளையம் சோளியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த ஊர்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாரியூர் கொண்டத்து காளியம்மன்
கோபி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவில், பவளமலை முத்துக்குமாரசாமி கோவில் ஆகிய கோவில்கள் நடை திறக்கப்படவில்லை. வழக்கமான பூஜைகள் மட்டும் நடந்தன. பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
மேலும் கோபி சாரதா மாரியம்மன் கோவில், கோபி டவுன் அக்ரகாரம் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவில், கோபி வடக்கு வீதி பெரம்பலூர் முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
பவானி
பவானி செல்லியாண்டி அம்மன் கோவில், மேற்கு தெரு மாரியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், எல்லையம்மன் கோவில் ஆகிய கோவில்களில் நடை திறக்கப்பட்டிருந்தது. செல்லியாண்டி அம்மனுக்கு நகைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நாராயணி வேடத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைத்து கோவில்களிலும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முக கவசம் அணிந்தும் தரிசனம் செய்தனர்.
இதேபோல் காலிங்கராயன் பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு வெற்றிலையால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அந்தியூர்
அந்தியூர் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மஞ்சள் பட்டு அணிவித்த நிலையில் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் கோவிலுக்குள் வெளியே நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் பகுதியில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்கள் நடை சாத்தப்பட்டு இருந்தன. வெங்கம்பூர் வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஊஞ்சலூர் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி அருகே உள்ள அய்யம்பாளையம் வடகரை பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று காலை 5 மணி அளவில் அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 6 மணி அளவில் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு் பூஜை நடந்தது. இதில் கவுந்தப்பாடி மற்றும் சுற்றுப் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை  அருகே உள்ள பூனாச்சி பெரியாண்டிச்சி அம்மன், பட்லூர் செம்முனீஸ்வரர் கோவில், வெள்ளித்திருப்பூர் குருநாதசாமி கோவில் உள்ளிட்ட கிராமத்தில் உள்ள கோவில்களில் தடையை மீறி பக்தர்கள் கூட்டமாக சென்று வழிபட்டனர்.
கொடுமுடி
கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலையில் காவிரியில் தீபம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல் பெண்கள் முளைப்பாரி கொண்டு வந்து காவிரியில் விட்டு வழிபாடு செய்தார்கள்.

மேலும் செய்திகள்