கொரோனா ஊரடங்கால் புனித நீராட தடை: பவானி கூடுதுறை களையிழந்தது- பக்தர்கள் நடமாட்டமின்றி காவிரிக்கரையோரம் வெறிச்சோடியது

கொரோனா ஊரடங்கால் புனித நீராட தடை விதிக்கப்பட்டதால் பவானி கூடுதுறை களையிழந்தது. இதனால் பக்தர்கள் நடமாட்டமின்றி காவிரி கரையோரமும் வெறிச்சொடி காணப்பட்டது.

Update: 2021-08-03 21:32 GMT
பவானி
கொரோனா ஊரடங்கால் புனித நீராட தடை விதிக்கப்பட்டதால் பவானி கூடுதுறை களையிழந்தது. இதனால் பக்தர்கள் நடமாட்டமின்றி காவிரி கரையோரமும் வெறிச்சொடி காணப்பட்டது.
பவானி கூடுதுறை
காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிக்கும் இடம் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை. இங்கு பிரசித்தி பெற்ற பவானி சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை, மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை, ஆடி 1-ந் தேதி, ஆடிப்பெருக்கு,  ஆகிய தினங்களில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். 
ஈரோடு மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு பக்தர்கள் வருவார்கள்.
அவர்கள் காவிரி ஆற்றங்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து கூடுதுறையில் புனித நீராடுவார்கள். புதுமண தம்பதிகளும் மாலைகளை ஆற்றில் விட்டு பவானி கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டு செல்வார்கள். 
வெறிச்சோடியது
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று சற்றே குறைந்த நிலையில் மீண்டும் நோயின் தாக்கம் தீவிரம் அடைந்து வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி ஆடிப்பெருக்கன்று காவிரிக்கரைகளில் புனித நீராடவும், பிரசித்தி பெற்ற கோவில்களில் சாமி தரிசனம் செய்யவும் அரசு தடை விதித்தது.
இதனால் ஆடிப்பெருக்கான நேற்று பவானி சங்கமேஸ்வரர் கோவில்  நடை சாத்தப்பட்டது. இதன் காரணமாக பக்தர்கள் இன்றி கோவில் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் புனித நீராட தடை விதித்ததால் பவானி கூடுதுறையும் களையிழந்தது.
கொடுமுடி
இதேபோல் கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் தலமான மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. கொரோனா பெருந்தொற்று 3-ம் அலை பரவாமல் இருப்பதற்காக ஆடிப்பெருக்கான நேற்று கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் நடை சாத்தப்பட்டது. காவிரி செல்லும் வழித்தடங்கள் அனைத்தும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் காவிரி ஆற்று படித்துறை மற்றும் கோவில் பகுதிகள் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. முன்னெச்சரிக்கையாக மாவட்ட எல்லையான நொய்யல் சோதனைச்சாவடி மற்றும் கொடுமுடி நுழைவுவாயில் ஆகிய இடங்களில் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு சோதனையில் ஈடுபடுத்தப்பட்டார்கள். கோவிலுக்கு வருபவர்கள் வரும் வழியிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை பகுதியில் உள்ள சின்ன பள்ளம், நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, காடப்பநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் பக்தர்கள் நீராட தடை செய்யப்பட்டு இருந்தது. இதனால் போலீசாரும் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைத்து தயாராக இருந்தனர். கொரோனா ஊரடங்கால் புனித நீராட தடைவிதிக்கப்பட்டதால் பக்தர்கள் நடமாட்டமின்றி காவிரி கரையோரம் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்