களையிழந்த ஆடிப்பெருக்கு விழா

அரியலூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது.

Update: 2021-08-03 21:31 GMT
அரியலூர்:

ஆடிப்பெருக்கு விழா
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் நீர்நிலைகளில் கூடி வழிபாடு செய்வது வழக்கம். புதுமண தம்பதிகள் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை தண்ணீரில் விடுவார்கள். சுமங்கலி பெண்கள் தாலிச்சரடில் புதிய மஞ்சள் கயிறை மாற்றி கட்டிக்கொள்வார்கள். இவை போன்றவற்றால் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ந் தேதியன்று ஆடிப்பெருக்கு அன்று நீர்நிலை கரையோரங்களில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். இதனால் விழா களை கட்டும்.
ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆடிப்பெருக்கு கொண்டாட அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியது போல் காணப்பட்டதால், ஆடிப்பெருக்கை வழக்கம்போல் கொண்டாடலாம் என்று பொதுமக்கள் எண்ணியிருந்தனர். இந்நிலையில் கொரோனா 3-வது அலை ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் அறிவுறுத்தலின்படி கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதித்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டன.
களையிழந்தது
இதில் அரியலூர் மாவட்டத்தில் கிருத்திகை, ஆடிப்பெருக்கு போன்றவற்றால் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை 3 நாட்களுக்கு கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டது. நீர்நிலைகளில் கூட அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா வழக்கமான உற்சாகமின்றி களையிழந்தது. வழக்கமாக ஆடிப்பெருக்கு அன்று அரியலூர் நகரில் உள்ள பெண்கள் செட்டி ஏரி கரைக்கு சென்று படித்துறையில் மஞ்சள், குங்குமம், பழங்கள் வைத்து தாலி பெருக்கி கொண்டாடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு படித்துறை மூடப்பட்டதால் அங்கு யாரும் வரவில்லை.
மாவட்டத்தின் தென் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள பகுதிகளான திருமழபாடி, திருமானூர் குருவாடி, தூத்தூர், தா.பழூர், அணைக்கரை வரையிலும், வட பகுதியில் ஓடும் வெள்ளாற்றங்கரையில் உள்ள தளவாய், சன்னாசி நல்லூர், ஓலையூர் பகுதிகளிலும் ஏராளமான புதுமண தம்பதிகள் திருமணத்தன்று அணிந்த மாலையை, ஆற்றில் விட்டு ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு தடையின் காரணமாக புதுமண தம்பதியினர், குடும்பத்தினர் நீர்நிலைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டதால், பக்தர்கள் கோவிலுக்கு செல்லவில்லை. முளைப்பாரி வைத்திருந்தவர்களை, அதனை நீர்நிலைகளில் விட முடியாமல் சிரமப்பட்டனர்.
சிறிய தேரை இழுத்த சிறுவர்கள்
சில ஊர்களில் சிறுவர்கள் மட்டும் தாங்கள் செய்த சிறிய தேர்களில் முருகன், சிவன், மாரியம்மன், விநாயகர், பெருமாள் ஆகிய கடவுள்களின் படங்களை வைத்து, மாலை அணிவித்து தமிழர்களின் பாரம்பரியமான பட்டு வேட்டியை சிறுவர்கள் கட்டிக்கொண்டு, பெண் குழந்தைகள் பட்டுப்பாவாடை அணிந்து படத்தேரை இழுத்துச் சென்றனர். 
இதேபோல் அயன் ஆத்தூர் கிராமத்தில் சிறுவர்கள் தேரை கிராமத்தில் உள்ள அனைத்து வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். மேலும் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரம்பரிய மரங்களின் நன்மைகள் பற்றி அறியும் வகையில், மாரிமுத்து- கனகா என்ற புதுமண தம்பதியினர். பள்ளி வளாகத்தில் படையலிட்டு 18 வகையான மரபு வழி மரக் கன்றுகளை நட்டு ஆடி பெருக்கை கொண்டாடினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்
திருமானூர், மீன்சுருட்டி
திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமழபாடி கொள்ளிடம் கரையோரம் ஆங்காங்கே சில புதுமண தம்பதிகள் ஆற்றில் படையலிட்டு வணங்கி புது தாலிக்கயிற்றை மாற்றிக்கொண்டனர். அதேபோல், பல்வேறு கிராமங்களிலும் ஏரி மற்றும் குளங்கள் உள்ள பகுதிகளில் புதுமண தம்பதிகள் படையலிட்டு, பெண்கள் புது தாலிக்கயிற்றை மாற்றிக்கொண்டனர். கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கோவில்களின் வெளிபுறத்திலேயே சிலர் சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர். கிராமப்புறங்களில் உள்ள சிறுவர்கள் சிறிய வகையான ேதர்களை நீர்நிலைகளுக்கு இழுத்துச்சென்று வந்தனர்.
மீன்சுருட்டி அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் கீழணையில் நேற்று காலை முதல் மாலை வரை புதுமண தம்பதிகள் ஆற்றங்கரையில் பூஜைகள் நடத்தி, வழிபாடு செய்தனர். பின்னர் திருமண மாலைகளை ஆற்றில் விட்டுவிட்டு, புது துணிகளை உடுத்திக்கொண்டு, தாலி பிரித்து புது மஞ்சள் கயிற்றில் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான புதுமண தம்பதிகள் மற்றும் மனைவி கர்ப்பமாக இருந்தால் கணவர் மட்டும் வந்து திருமண மாலைகளை ஆற்றில் விட்டனர். கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு ஏராளமான புதுமண தம்பதிகள் வந்திருந்ததை காண முடிந்தது.
தா.பழூர்
தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராமங்களான கோடாலிகருப்பூர், சோழமாதேவி, இடங்கண்ணி, தென்கச்சிபெருமாள்நத்தம், வாழைக்குறிச்சி, மதனத்தூர் உள்ளிட்ட கிராமங்களின் ஆற்றுப்படுகைகளில் சிறப்பு வழிபாடுகளுடன் ஆடிப்பெருக்கை கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தடையின் காரணமகா, பொதுமக்கள் குறைந்த அளவிலேயே ஆற்றில் வழிபாடு செய்ய வந்திருந்தனர். திருமணமான பெண்கள் தங்கள் திருமாங்கல்யத்தை காவிரி தாய்க்கு படைத்து, தங்களது மாங்கல்ய பலத்தை அதிகப்படுத்த வேண்டி, மீண்டும் அணிந்து கொண்டனர். புதுமணத் தம்பதிகள் தங்களது திருமண மாலைகளை ஆற்றில் விட்டு விட்டு திருமாங்கல்யத்தை புதிய கயிற்றில் மாற்றி கட்டும் சம்பிரதாயத்தை நிறைவேற்றினர். அதிக அளவு கூட்டம் கூடாமல் இருப்பதற்காக தா.பழூர் போலீசார் கரையோர கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்