தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி பெண்கள் சிறப்பு வழிபாடு
நெல்லையில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி நேற்று தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
நெல்லை:
தமிழகத்தில் ஆடி மாதம் 18-ந்தேதி ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நேற்று கொண்டாடப்பட்டது. நெல்லையிலும் ஆடிப்பெருக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பெருகி ஓடி வரும் தாமிரபரணியில் நேற்று அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் புனித நீராடினர். தாமிரபரணி ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மலர் தூவி வழிபட்டனர்.
ஒரு சில பெண்கள் ஆற்றங்கரையில் வெற்றிலை, பாக்கு வைத்து சூடம் ஏற்றி வழிபாடு நடத்தினர். பின்னர் தங்களது பழைய தாலிக்கயிற்றை அகற்றிவிட்டு, புதிய தாலிக்கயிற்றை கட்டிக் கொண்டனர். அவரவர் சம்பிரதாயப்படி தாலிக்கயிறு, தாலிச்சங்கிலியை புதுப்பித்து கட்டிக் கொண்டனர். குடும்பத்தினருடன் வந்து நீராடிய பெண்கள், கணவரின் கையால் புதிய மஞ்சள் கயிற்றை கட்டிக் கொண்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர்.