நீர்வழித்தடங்களை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்-கலெக்டர் உத்தரவு
கண்மாய் நீர்வழித்தடங்களை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் சந்திரகலா கூறினார்
ராமநாதபுரம்
கண்மாய் நீர்வழித்தடங்களை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் சந்திரகலா கூறினார்.
விழிப்புணர்வு நடவடிக்கை
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, ராமநாதபுரம் புதிய பஸ் நிலைய வளாகத்தில் மாவட்ட கலெக்டர் சந்திரகலா கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக அரசு பஸ்கள், ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி பணிகளை மேற்கொண்டார். மேலும் கட்டாயம் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற நடவடிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகளிடத்தில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார்.
அதன்பின்பு, ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் உழவர்சந்தையின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார். புதிய பேருந்து நிலையத்தை சுற்றி நடைபாதை ஓரத்தில் வியாபாரம் மேற்கொள்ளும் நபர்களை உழவர்சந்தை வளாகத்தில் வியாபாரம் மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
நீர் வழித்தடங்கள்
இதைதொடர்ந்து, ராமநாதபுரம் பெரிய கண்மாய் நீர்பிடிப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெரிய கண்மாயிலிருந்து ராமநாதபுரம் நகரில் உள்ள ஊருணிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான நீர்வழித்தடங்களை தடையின்றி உரிய முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களிடம் கூறினார்.
பின்னர், நகராட்சிக்கு உட்பட்ட முகவை ஊருணியின் பராமரிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஊருணியின் கரைகளில் பொதுமக்கள் காலை, மாலை வேளையில் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக சுத்தமாக பராமரிக்க நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.