அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள்
ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.
ராமநாதபுரம்
ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.
ஆடிப்பெருக்கு
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ந் தேதி அன்று ஆடிப்பெருக்கு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. பதினெட்டாம்பெருக்கு என்றும், ஆடி 18 என்றும் அழைக்கப்படும் இந்த விழா ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிப்பதாகவும், குறிப்பாக நதியை பெண்ணாக வணங்கும் நாளாகும். இந்த நாளில் புத்தாடை அணிந்து நதிக்கரைகளிலும், நீர்நிலைகளின் கரைகளிலும் பொங்கல் உள்ளிட்டவைகளை படைத்து வணங்குவது வழக்கம். இந்த நன்னாளில் தொடங்கும் காரியங்கள் பலமடங்கு பலன்தரும் என்பது நம்பிக்கை. மேலும், ஆடிப்பெருக்கன்று பெண்களுக்கு தாலி பெருக்கி போடுவார்கள். புது மணப்பெண்கள் புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள்.
இந்த ஆண்டு கடந்த ஆண்டை போலவே கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோவில்களில் திருவிழா உள்ளிட்டவைகளை பக்தர்களுடன் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசின் உத்தரவினை ஏற்று அனைத்து கோவில்களிலும் குறிப்பாக அம்மன் கோவில்களில் ஆடிப்பெருக்கு திருவிழா பக்தர்களின்றி நடைபெற்றது.
பக்தர்களுக்கு அனுமதி இல்லை
ராமநாதபுரம் மகர்நோன்பு திடல் அருகில் 9 அடி உயரத்தில் எழுந்தருளி உள்ள ருத்ரமாதேவி அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. ஊருணி கரையில் இருந்து கரகம், தீச்சட்டி ஏந்தி பூசாரி முனியசாமி கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் நடத்தினார். விழாவையொட்டி ருத்ரமாதேவி, உத்தரகாளி அம்மன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். இதேபோல, ராமநாதபுரம் கன்னிகாபரமேஸ்வரி அம்மன், வனசங்கரி அம்மன், முத்தால பரமேஸ்வரி அம்மன், பெரிய மாரியம்மன், மல்லம்மாள் காளியம்மன், வெட்டுடையாள் காளியம்மன், ராஜகாளியம்மன், ராஜேஸ்வரி அம்மன் கோவில்களில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
திருஉத்தரகோசமங்கை கிராமத்திலுள்ள வராகி அம்மன் கோவில்களிலும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன.