குடியாத்தம் அருகே; மாயமான வாலிபர் கிணற்றில் பிணமாக கிடந்தார்
குடியாத்தம் அருகே மாயமான வாலிபர் கிணற்றில் பிணமாக கிடந்தார்.;
குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த எர்த்தாங்கல் காவாமேடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் சுரேஷ் (வயது 19), குடியாத்தத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன்பிறகு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுரேசை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் சுரேஷ் பிணமாக மிதந்துள்ளார்.
இதுகுறித்து போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சுரேஷின் உடலை மீட்டனர்.
இதுதொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.