வணிகர்கள் கடை உரிமத்தை அபராதம் இன்றி புதுப்பித்து கொள்ளலாம்; நியமன அலுவலர் பேச்சு

கொரோனா ஊரடங்கால் கடை உரிமத்தை புதுப்பிக்க தவறிய வணிகர்கள் அபராதமின்றி கடை உரிமத்தை புதுப்பித்து கொள்ளலாம் என்று வேலூர் மாவட்ட உணவு பாதுபாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் கூறினார்.

Update: 2021-08-03 18:15 GMT
வேலூர்

கொரோனா ஊரடங்கால் கடை உரிமத்தை புதுப்பிக்க தவறிய வணிகர்கள் அபராதமின்றி கடை உரிமத்தை புதுப்பித்து கொள்ளலாம் என்று வேலூர் மாவட்ட உணவு பாதுபாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேலூர் மாவட்டம் சார்பில் உணவு பாதுகாப்பு உரிமம் புதுப்பித்தல், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூரில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட தலைவர் ஞானவேலு தலைமை தாங்கினார். சங்க மாநில துணைத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ்குமார், இளைஞரணி செயலாளர் அருண்பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஏ.வி.எம்.குமார் வரவேற்றார்.

அபராதமின்றி புதுப்பித்து கொள்ளலாம்

இதில், சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட உணவு பாதுபாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

கொரோனா வைரஸ் 2-அலை பரவல் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த சமயத்தில் வணிகர்கள் பலர் தங்களின் கடை உரிமத்தை புதுப்பிக்கவில்லை. 

கொரோனா ஊரடங்கால் கடை உரிமத்தை புதுப்பிக்க தவறிய வணிகர்கள் ஒருமாத காலம் அபராதமின்றி உரிமத்தை புதுப்பித்து கொள்ளலாம்.
கொரோனா 3-வது அலை முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு செய்து வருகிறது. அதற்கு வணிகர்கள், வியாபாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

ஓட்டல்கள், கடைகள், வணிக வளாகங்களில் கொரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், புகையிலை, குட்கா, பான்மசாலா உள்ளிட்டவற்றை விற்பனை செய்யக்கூடாது. 

இவ்வாறு அவர் பேசினார்.

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு

தொடர்ந்து வணிகவரித்துறை உதவி கமிஷனர் சத்தியகுமார், அனைத்து வணிகர்களும் கட்டணமில்லாமல் வணிக நலவாரியத்தில் இணைவது குறித்தும், மாநகராட்சி உதவி கமிஷனர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கி பேசினார்கள்.

இதில், வேலூர் மாவட்ட, நகர, வட்ட அனைத்து வணிகர் சங்க தலைவர்கள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில், வேலூர் மாவட்ட பொருளாளர் அமின் அகமது ஆலியார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்