திருவாரூரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட விவசாயிகள்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள திருவாரூரில் இருந்து விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

Update: 2021-08-03 18:11 GMT
திருவாரூர்:
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள திருவாரூரில் இருந்து  விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.
புதிய வேளாண் சட்டங்கள்
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 240 நாட்களுக்கு மேலாக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
 இதில் திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் செல்கின்றனர்.
டெல்லிக்கு புறப்பட்ட விவசாயிகள்
இந்த நிலையில் திருவாரூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட விவசாயிகளை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் சுப்ரமணியன், மாவட்ட தலைவர் தம்புசாமி உள்பட 25 பேர் பயணக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களை விவசாய சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள் தலைமையில் விவசாயிகள் வழியனுப்பி வைத்தனர்.
அப்போது விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுப்ரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
  மேகதாது அணை
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 8 மாதத்திற்கும் மேலாக டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்துள்ளனர். ஆனால் பிரதமர், போராடும் விவசாயிகளை சந்தித்து பேசவில்லை, இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.
கடந்த ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், புதிய மின்சார மசோதாவை கைவிட கோரியும், தமிழக நலனுக்கு எதிரான மேகதாது அணை கட்டுவதை எதிர்த்தும் இப்போராட்டத்தில் பங்கேற்க இருக்கிறோம். வருகிற 5-ந் தேதி முதல்  11-ந் தேதி வரை போராட்டத்தில் பங்கேற்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்