மூதாட்டியை ஏமாற்றி நகை-பணத்தை திருடிய ஆசாமிகள்

சிகிச்சை அளிப்பதாக கூறி மூதாட்டியை ஏமாற்றி நகை-பணத்தை திருடிய 2 ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.;

Update: 2021-08-03 17:53 GMT
சிவகங்கை

 சிகிச்சை அளிப்பதாக கூறி மூதாட்டியை ஏமாற்றி நகை-பணத்தை திருடிய 2 ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

மூதாட்டி

சிவகங்கையை அடுத்த ஒக்கூரை சேர்ந்தவர் கமலம் (வயது 75).இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொழுக்கட்டைபட்டியில் உள்ள தன்னுடைய உறவினர் அமுதா என்பவரின் வீட்டிற்கு சென்றிருந்தார். சம்பவத்தன்று காலை அவரும், உறவினரும் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டுக்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள், தாங்கள் பொதுநல சேைவ மையத்தில் இருந்து வருவதாகவும், வீட்டில் யாருக்காவது உடல்நலக்குறைவு இருக்கிறதா? என்று கேட்டு இருக்கிறார்கள்.
அப்போது மூதாட்டி தனக்கு முழங்காலில் வலி இருப்பதாக கூறி இருக்கிறார். இதையடுத்து வீட்டுக்குள் நுழைந்த 2 வாலிபர்கள் அங்கிருந்த உறவினர் அமுதாவை வைத்தியத்திற்காக துளசி பறித்து வரும்படி கூறி இருக்கிறார்கள்.

நகை, பணம் திருட்டு

 இதைத்தொடர்ந்து அமுதா துளசி பறிக்க சென்றார். அப்போது வாலிபர் ஒருவன் மூதாட்டியிடம் தைலம் தேய்க்க வேண்டும். குப்புறப்படுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.
உடனே மூதாட்டி குப்புறப்படுத்து உள்ளார். அந்த வாலிபர் அவருக்கு தைலம் தேய்ப்பது போல நடித்து உள்ளார். இதற்கிடையே மற்றொரு வாலிபர் வீட்டு பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.18 ஆயிரத்தை திருடி இருக்கிறார். மூதாட்டிக்கு தைலம் தேய்த்த வாலிபர் அவர் அணிந்து இருந்த 3 பவுன் நகையை பறித்தார். உடனே மூதாட்டி, திருடன், திருடன் என சத்தம் போடுவதற்குள் 2 வாலிபர்களும் வீட்டை விட்டு வெளியே ஓடி மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மருதுபாண்டியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து நகை, பணத்தை திருடிக்கொண்டு தப்பி ஓடிய 2 ஆசாமிகளையும் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்