தளி அருகே காதல் தகராறு: பிளஸ்-2 மாணவியின் அண்ணன் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து-8 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
தளி அருகே காதல் தகராறில் பிளஸ்-2 மாணவியின் அண்ணன் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக மாணவியின் காதலன் உள்பட 8 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
பிளஸ்-2 மாணவி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா முதுகானப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் சந்தோஷ்குமார் (வயது 26). இவர் மீது போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் உள்ளன. சந்தோஷ்குமாரும், தளி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவியும் கடந்த 3 மாதமாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் மாணவியை கண்டித்தனர்.
இதில் மனவேதனை அடைந்த மாணவி நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் தனது காதலன் சந்தோஷ்குமாருக்கு போன் செய்து, தான் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சந்தோஷ்குமார் தனது நண்பர்களுடன் ஏரி பகுதிக்கு சென்று மாணவியை சந்தித்து பேசினார். பின்னர் மாணவியை சமாதானம் செய்து அவரது பெற்றோர் வீட்டுக்கு அழைத்து சென்றார்.
3 பேருக்கு கத்திக்குத்து
அங்கு மாணவியின் குடும்பத்தினருக்கும், சந்தோஷ்குமார் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாணவியின் அண்ணனை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. அவருக்கு வயிற்றில் குத்து விழுந்ததில் குடல் சரிந்தது. இதனை தடுக்க வந்த 2 பேருக்கு தலை, கை உள்ளிட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. பின்னர் சந்தோஷ்குமார் உள்பட அனைவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் மாணவியின் அண்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமார் உள்பட 8 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். காதல் தகராறில் 3 பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.