திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்திற்கு நேற்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தண்ணீரை திறந்து வைத்தார்
திருமூர்த்தி அணையில் இருந்து 4ம் மண்டல பாசனத்திற்கு நேற்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தண்ணீரை திறந்து வைத்தார்
தளி,
உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்திற்கு நேற்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தண்ணீரை திறந்து வைத்தார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
திருமூர்த்தி அணை
பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதற்காக பாசன நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் பெறப்படும் தண்ணீரும் மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியில் உருவாகும் காட்டாறுகள், பாலாறு மற்றும் திருமூர்த்திமலை ஆறு ஆகியவற்றின் மூலம் பெறப்படுகின்ற தண்ணீரும் திருமூர்த்தி அணையின் முக்கிய நீர் ஆதாரங்களாகும். அதை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் உடுமலை, கணக்கம்பாளையம், மடத்துக்குளம், குமரலிங்கம், பூலாங்கிணர் மற்றும் குடிமங்கலம் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகள் கோரிக்கை
இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள் மூலமாக பி.ஏ.பி. தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் அணைகளின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வந்தது. ஆனால் பி.ஏ.பி. திட்டத்தின் உயிர்நாடியான திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து ஏற்படவில்லை.
அதைத்தொடர்ந்து பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வந்தது. இதையடுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதற்குண்டான கருத்துருவை அதிகாரிகள் தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
இந்த சூழலில் திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டலம் மற்றும் தளி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பொத்தானை அழுத்தி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து மதகுகள் வழியாக பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது.இதையடுத்து அணைப்பகுதியில் அனைவரும் மலர் தூவி வரவேற்றனர்.
அணைக்கு ஏற்பட்டுள்ள நீர் வரத்து மற்றும் நீர் இருப்பின் பொருத்து ஒரு சுற்றுக்கு 21 நாட்கள் வீதம் 5 சுற்றுகளாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர் தாலுகா மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர், தாராபுரம், காங்கேயம் தாலுகாவில் உள்ள 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தளிவாய்க்கால்
அதேபோன்று பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தளி வாய்க்காலில் நேற்று முதல் அடுத்த ஆண்டு மே 31-ந் தேதி வரை தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் 2 ஆயிரத்து786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
நிகழ்ச்சியில் மடத்துக்குளம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன், உடுமலை ஆர்.டி.ஓ. கீதா, தாசில்தார் ராமலிங்கம் திருமூர்த்தி அணை கண்காணிப்பு பொறியாளர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் கோபி, உதவி செயற்பொறியாளர் காஞ்சிதுரை, உதவி பொறியாளர் சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் மொடக்குபட்டி ரவி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மலர்விழி பாபு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருமூர்த்தி அணையின் மொத்த உயரம் 60 அடி ஆகும். நேற்றைய நிலவரப்படி அணையில் 48.07 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு காண்டூர் கால்வாய் மூலமாக 760 கனஅடியும் பாலாறு மூலமாக 21 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து பி.ஏ.பி. பிரதான கால்வாயில் வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.