32 தனியார் பஸ்களின் ஊழியர்களுக்கு அபராதம்

தேனி மாவட்டத்தில் முக கவசம் அணியாத 32 தனியார் பஸ் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-08-03 16:39 GMT
தேனி: 

தேனி மாவட்டத்தில் தனியார் பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்கள் பலரும் முக கவசம் அணியாமல் பணியாற்றி வருகின்றனர். இதனால், பஸ்களில் பயணம் செய்யும் மக்களும் முக கவசம் அணியாமல் பயணம் செய்வது தொடர்கிறது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமலும், முக கவசம் அணியாமலும் பணியாற்றும் தனியார் பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அபராதம் விதிக்க கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார்.

 அதன்பேரில், மாவட்டத்தில் இதுவரை 32 தனியார் பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், அந்த 32 பஸ்களின் உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அந்த பஸ் உரிமையாளர்களின் அனுமதிச்சீட்டை ரத்து செய்யவும், பஸ்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர்களும் துறைவாரியான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தனியார் பஸ்களின் உரிமையாளர்கள் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும். 

முக கவசம், கையுறை அணிந்து பணியில் ஈடுபட ஊழியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத தனியார் பஸ் உரிமையாளர்களின் அனுமதி சீட்டு ரத்து செய்யப்படும்.


 எனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்